முதலமைச்சரின் அறிவிப்பிற்காய் காத்திருக்கிறது பேரவை.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில் தமிழ்மக்கள் பேரவை எதிர்வரும்- 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது.
சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட தமிழ்மக்கள் பேரவையின் இந்தக் கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் எனவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் (28) நடைபெற்ற வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
எனினும், அதனை நிராகரித்து இந்தச் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர். இதனால் கூட்டமைப்பு தலைமைக்கும்,விக்னேஸ்வரனுக்குமிடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்மக்களின் எதிர்காலத் தலைமைத்துவம் தொடர்பாக காத்திரமான முடிவை எடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது. வடக்கு,கிழக்கில் தமிழர் அரசியல் நெருக்கடியான கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் உடனடியாக மாற்றுத் தீர்வொன்றை எட்ட வேண்டியது அவசியமென வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய சரியான தலைமைத்துவம் தேவைப்படுவதாகவும், ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் குரல் கொடுக்கக் கூடியவரான அந்தத் தலைமைத்துவத்தின் அவசியத்தை உணர்ந்தே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒரேகுடைக்குள் கொண்டு வரும் பாரிய முயற்சியாக இது அமையுமெனவும் தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பிற்காய் காத்திருக்கிறது பேரவை.
Reviewed by Author
on
August 30, 2018
Rating:
Reviewed by Author
on
August 30, 2018
Rating:


No comments:
Post a Comment