பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை மறைத்தவர்கள் சார்பாக மன்னிப்பு கோரிய போப்
மதகுருக்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மறைத்த கத்தோலிக்க திருச்சபைகளின் உறுப்பினர்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் போப் ஃபிரான்ஸிஸ்.
அயர்லாந்து குடியரசுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார் போப் ஃபிரான்ஸிஸ்.
திருச்சபை தலைவர்களால் அயர்லாந்தில் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட்டமை ஆகியவை குறித்து போப் மன்னிப்பு கோரியுள்ளார்.
39 வருடங்களில் முதல்முறையாக போப் அயர்லாந்துக்கு வருகை தந்தார்.
"முன்னதாக பாலியல் துன்புறுத்தலை சந்தித்து, அப்பாவித்தனம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, நீங்கா வலிகொண்ட நினைவுகளை கொண்டவர்களின் கதையை கேட்டால் யாருக்குமே துயரம் வரும்" என்று கூறிய போப், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் கத்தோலிக்க குடும்பங்களின் சந்திப்பு நிகழ்வின் நிறைவு பிரார்த்தனை கூட்டத்திற்காக சுமார் 2 லட்சம் பேர் ஃபீனிக்ஸ் பார்க் என்ற இடத்தில் கூடியிருந்தனர்.
அயர்லாந்து மக்கள் மீது திருச்சபை ஊழியர்கள் நடத்திய துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் மறைக்கப்பட்டமை ஆகியவை குறித்த ஒப்புதலை அவர் பிரார்த்தனை கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறை அவர் மன்னிப்பு கோரும்போதும் கூட்டத்தினர் அனைவரும் பெரும் கைத்தட்டலை வழங்கினர்.
முன்னதாக, கிறிஸ்தவ மதகுருக்களால் நிகழ்த்தப்பட்ட "வெறுக்கத்தக்க குற்றங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபைகள் போதுமான அளவு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது குறித்து வெட்கப்படுவதாக போப் ஃபிரான்ஸிஸ் தெரிவித்திருந்தார்.
"பேராயர்கள், மதகுருக்கள், பாதிரியார்கள் போன்ற திருச்சபை ஊழியர்கள் இம்மாதிரியான வெறுக்கத்தக்க குற்றங்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்காமையால் அது நியாயமான பெரும் சீற்றத்தை எழுப்பியுள்ளது. மேலும் அது கத்தோலிக்க மக்களுக்கு வலியையும், அவமானமாத்தையும் ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.
"நானும் அதை உணர்கிறேன்" என்றார்.
மேலும் இம்மாதிரியான குற்றங்கள் தேவாலயங்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நடைபெற அனுமதிக்க போவதில்லை என்றும் போப் தெரிவித்தார்.
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மதகுருக்கள் மீதும் அதனை மறைத்தவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அயர்லாந்து பிரதமர், போப்பிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
"மக்கள் இருளில், பூட்டப்பட்ட அறைகளுக்குள், அவர்கள் உதவிக்கான கதறல் கேட்கப்படாமல் போனது, புனித தந்தையே பாதிக்கப்பட்டவர்களின் வலியை கேளுங்கள் என நான் வேண்டி கொள்கிறேன்." என்றும் அயர்லாந்து பிரதமர் வரத்கர் தெரிவித்திருந்தார்.
குழந்தைகளுக்கு எதிராக புரியப்படும் குற்றங்களை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அத்தகைய குற்றங்களை புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசு மற்றும் பெரிய சமுதாயங்கள் தேவாலயங்களின் இந்த குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க தவறியதால் இது ஒரு கசப்பான சேதமடைந்த பாரம்பரியத்தை உருவாக்கியதோடு பலருக்கு நீங்காத வலியும், வேதனையும் அளித்துள்ளது என்றும் அயர்லாந்து பிரதமர் வரத்கர் தெரிவித்திருந்தார்.
பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை மறைத்தவர்கள் சார்பாக மன்னிப்பு கோரிய போப்
Reviewed by Author
on
August 27, 2018
Rating:
Reviewed by Author
on
August 27, 2018
Rating:


No comments:
Post a Comment