சுவிஸ் மடு அன்னைத் திருத்தலத்தில் ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழர்கள் -
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இணைந்து, மரியாஸ்ரைன் திருத்தலத்தில் குறித்த திருப்பலியினை நடத்தியுள்ளனர்.
இன்று காலை 10.30 மணிக்கு திருவிழாத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அன்னையின் திருவுருவப் பவனியும் நடைபெற்றது.
மருதமடுத்தாயாரின் திருவிழா, 24வது ஆண்டாக சுவிட்ஸர்லாந்து நாட்டில் மிகவும் கருத்துள்ள விதத்திலே இவ்வாண்டும் கொண்டாடப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து நாட்டின் சொலத்தூர்ண் மாநிலத்தில் உள்ள மெற்செர்லென் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மரியாஸ்ரைன் திருத்தலத்தில், சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட மோட்டார் ஊர்தியில், பசுமையின் வர்ணத்தைப் பறைசாற்றும் வயல்வெளியே மருதமடுத் திருத்தாயாரின் பவனி இடம்பெற்றது.
ஆன்மீகத்தையும், உலகில் அமைதி நிலவவேண்டும் என்னும் வேண்டுதலையும் முன்னிலை படுத்தியதாகவே இவ் வழிபாடு அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதமடுத்தாயார் மொழி, இனம், சமயம் அனைத்தையும் கடந்த நிலையில் அனைவருக்கும் அருள் கொடைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
இதனால் தான் அனைத்து மக்களும் அன்னையை நாடி வருகின்றனர். கத்தோலிக்க மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய சமயச் சகோதரர்களும், ஏனைய மொழி பேசுகின்ற மக்களும் இவ்விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.
இலங்கை நாட்டைத் தாக்கிய உள்நாட்டுப் போரின் போது பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக் கணக்காண மக்கள் மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அடைக்கலம் புகுந்து, மன நிம்மதியோடு வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, சுவிஸ் கத்தோலிக்க திருச்சபையின் வெளிநாட்டு கத்தோலிக்க மக்களுக்கான குருமுதல்வர் லூயிஸ் கப்பில்லா, இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல குருக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், சுவிட்ஸர்லாந்து நாட்டின் பல பாகங்களிலிருந்தும், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல தமிழ் மக்கள் வந்து மருதமடுத்தாயாரின் விழாவில் கலந்து ஆன்மீக அருள் நலம் பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் மடு அன்னைத் திருத்தலத்தில் ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழர்கள் -
Reviewed by Author
on
August 19, 2018
Rating:

No comments:
Post a Comment