நான் கைதானதற்கு காரணம்-நடிகர் கருணாஸ் பேட்டி -
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் பேட்டியளித்த அவர் கூறுகையில், ‘எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்வேன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததும், சட்டமன்றத்தில் சபாநாயகரை சந்தித்து அனுமதி கேட்டதும், அதற்கு அனுமதி மறுத்ததும், அதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய போட்டி சட்டமன்ற கூட்டத்தில் நான் கலந்து கொண்டதும் தான் நான் கைது செய்யப்பட்டதற்கான காரணம்.
அரசு செய்கின்ற தவறுகளை நான் கண்டித்து பேசினால், சுட்டிக்காட்டினால் சிறைவாசம். அரசு செய்கின்ற தவறுகளை ஆதரித்தால் அவர்களுக்கு சுகவாசம். இது தான் நிலைமை. சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்.
கருணாஸ் தண்டிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அரசுக்கு யார் தேவையோ அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. எஸ்.வி.சேகர் செய்தது தவறு என்று உலகறியும். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
மற்றொரு தலைவர் என்ன பேசினார் என்பதையும் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவர் மீது சட்டம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இங்கே நடக்கின்ற ஒவ்வொரு அவலங்களையும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நிச்சயமாக மக்கள் இதற்கான நல்ல தீர்வை தருவார்கள். இந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒரு மேடையில் தான் ஒரு அதிகாரி செய்த தவறை சுட்டிக்காட்டினேன். படித்த அந்த அதிகாரி தரம் தாழ்ந்த செயல்களை செய்து கொண்டிருக்கிறார்.
பொய் வழக்குகளை புனைக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று மூத்த அதிகாரிகளிடம் நான் புகார் கொடுத்தேன். ஆனால் அத்தனை அரசு அதிகாரிகளும் ஒன்றாக சேர்ந்து, அரசும் ஒன்றாக சேர்ந்து என் மீதே வழக்கு போடுகிறார்கள்.
நான் யார் மீது புகார் கொடுத்தேனோ அவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு என் மீது வழக்கு தொடுக்கிறார்கள். நீதிமன்றத்தின் மீது ஒட்டுமொத்த மக்களுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
எத்தனை வழக்குகள் வந்தாலும் நின்று எதிர்கொள்வோம். நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
நான் கைதானதற்கு காரணம்-நடிகர் கருணாஸ் பேட்டி -
Reviewed by Author
on
September 30, 2018
Rating:

No comments:
Post a Comment