அறிவாற்றல் இல்லாத அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்: நஸீர் அஹமட் -
அபிவிருத்திக்கென வரும் வருடாந்த நிதிகளை பயன்படுத்தாமல் திறைசேரிக்குத் திரும்ப வைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிப்பதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் மக்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பல மில்லியன் ரூபாய்கள் பயன்படுத்தப்படாமல் திறைசேரிக்குத் திரும்புவதற்கு வழிவகுப்பது பிரதேச மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
சாணக்கியமும் வினைத்திறனும் அற்ற பல அரசியல்வாதிகளால் மக்களுக்கு கேடுதான் விளைகிறது. இதனை மக்கள் அறிந்து கொள்வதில்லை.
அரசியல்வாதிகள் சமகால நாட்டு நடப்புக்கள், உலக அரசியல் ஒழுங்குகள். நாட்டின் நிர்வாக முறைமைகள், சட்டம் ஒழுங்கு, பன்மொழி ஆற்றல் உட்பட துறைசார்ந்த அறிவாற்றல்களையும் செயற்திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், நமது நாட்டில் அவ்வாறான அரிசியல்வாதிகளைக் காண்பது அரிதானது.
அதனால் தான் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்துவதிலும் நாட்டை அபிவிருத்தி செய்வதிலும் பின்னடைவுகள் ஏற்படுகின்றன.
உண்மையாக மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெறக் கூடிய நிர்வாக பொறிமுறைகளை நாடிச் செல்லாது மக்களோடு தெருவுக்கு வந்து குந்தியிருந்து ஆர்ப்பாட்டத்தில் கூச்சல்போடுபவர்களாகவே பல அரசியல்வாதிகள் தங்களை குறைமதியாளர்களாக இனங்காட்டிக் கொள்கின்றார்கள்.
இத்தகைய அரசியல்வாதிகள் எந்தவொரு முரண்பாட்டையும் நுட்பமாக அணுகித் தீர்வு காணத் தகுதியவற்றவர்கள் என்பது வெளிப்படை.
மேலும், இத்தகைய குறைமதி அரசியல்வாதிகளே குழப்பங்களுக்கும் காரணமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய அரசியல்வாதிகளை இனிவரும் காலங்களில் நாகரீகமுள்ள அனைத்து சமூகங்களும் நிராகரிக்க வேண்டும்.
பிரதேச அரசியல்வாதிகள் தமது பிரதேச மக்களின் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள், முன்னுரிமைகள் என்பனவற்றைக் கருத்திற்;கொண்டு அபிவிருத்திக்கான திட்டங்களை வரைந்து முன்மொழிவுகளைச் செய்யாததால் அபிவிருத்திகள் இடம்பெற முடியாதுள்ளன.
அதேவேளை, சில அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் அக்கறையற்ற போக்கினால் பிரதேச அவிபிருத்திக்கென வருடாந்தம் ஒதுக்கபப்டும் நிதிகள் பல மில்லியன்களாக மீண்டும் திறைசேரியைச் சென்றடையும் துர்ப்பாக்கிய நிலையுள்ளது.
குறிப்பாக சிறுபான்மை இன அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் அறிவற்றவர்களாக இருந்து விடுகின்றார்கள்.
இந்தப் போக்கை இனிவரும் காலங்களில் மாற்றியமைக்க வேண்டும். சாணக்கியமற்ற அரசியல்வாதிகளை நிராகரித்து மக்கள் அறிவாற்றலுள்ள அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவாற்றல் இல்லாத அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்: நஸீர் அஹமட் -
 
        Reviewed by Author
        on 
        
January 16, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
January 16, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment