புதிய அரசியல் அமைப்பு குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்!
எங்களுடைய எதிர்பார்ப்பின்படி, இந்த நாடாளுமன்றத்தின் காலத்திலேயே புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முடியும்.
ஆனால், அரசாங்கத்துக்கு அதற்கான துணிவு இல்லாவிட்டால் கஷ்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“இந்நிலையில், இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றுசேர்ந்தால், அது சாத்தியப்படும்.
அதனால் தான், ஜனாதிபதியாக சு.கவின் தலைவரும் பிரதமராக ஐ.தே.கவின் தலைவரும் இருக்கும் இந்தக் காலத்திலேயே, புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கான கடும் பிரயத்தனத்தைக் காட்டி வருகின்றோம்.
காரணம், நம் நாட்டு சரித்திரத்தில், இரண்டு பிரதான கட்சிகள், இந்த விடயத்தில் ஒத்துழைத்தது இல்லை. அதனால் தான், நாடாளுமன்றம் முடிகிறதோ முடியவில்லையே, செய்யவேண்டியவற்றை செய்வோமென்று, நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
தற்செயலாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், இதுவோர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட வரைவு என்பதால், தொடர்ச்சியாக அதற்கான பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் இல்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை, ஒரு வருடத்தில் முடித்திருக்கலாம். 2015 தேர்தல் முடிந்தவுடனேயே, நாங்கள் அதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்தோம். அரசாங்கமும், அரசமைப்புக்கான கருத்தறியும் குழுவொன்றை நியமித்தது.
2016 ஜனவரியில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக, அரமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது. அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், அதிலும் இரண்டு மாதகால தாமதம் ஏற்பட்டு, மார்ச் முதலாம் திகதி தான் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேறிய உடனேயே, வழிநடத்தல் குழு, உப குழுக்கள் 6, இன்னுமோர் உபகுழு என்ற எல்லாக் குழுக்களினதும் அறிக்கைகள் அந்த வருட இறுதிக்குள்ளேயே தயாரிக்கப்பட்டுவிட்டன.
இவை, அவசரத் தயாரிப்பில்லை. அந்த வருடத்தில் நவம்பர் மாதம் வரையில், வழிநடத்தல் குழுவால், 40க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இப்போது வரை, 82 தடவைகள், இக்குழு கூடியுள்ளது. தவிர, ஒவ்வோர் உபகுழுவும், பல கூட்டங்களை நடத்தி, தங்களுடைய அறிக்கைகளை வெளிக்கொண்டு வந்தன.
ஆனால், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தயாராகும் போது தான், சில அரசியல் கட்சிகள் பின்வாங்கத் தொடங்கின. இதனால், இந்த அறிக்கை தயாரிப்பதில், 2016 நவம்பர் முதல் 2017 செப்டெம்பர் வரையான நீண்ட காலதாமதம் ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே, இந்தக் காலதாமதத்துக்குப் பிரதான காரணமாக இருந்தது. ஆனால், அறிக்கை வெளிவந்த பின்னர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில், அரசமைப்புப் பேரவையில் 6 தடவைகள், அந்த அறிக்கைகள் தொடர்பில் விவாதங்கள் நடந்தன.
5 நாள்கள் இடம்பெற்ற விவாதங்களின் போது, பொது எதிரணியைச் சேர்ந்த இரண்டு பேரைத் தவிர வேறு எவரும், அறிக்கையின் உள்ளடக்கங்களுக்கு எதிராகப் பேசவில்லை.
ஆறாவது நாள் விவாதத்தில், எவரும் கலந்துகொண்டிருக்காததால், அது நடைபெறவில்லை. ஆகவே, அந்த இடைக்கால அறிக்கைகள் மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாகவும், எதிரான விமர்சனங்கள், பெரியளவில் இருந்திருக்கவில்லை.
அடுத்தகட்டமாக, வழிநடத்தல் குழுவானது, இந்த இடைக்கால அறிக்கையையும் உபகுழுக்களின் அறிக்கைகளையும் வைத்துக்கொண்டு, அரசமைப்புக்கான ஒரு நகல் வரைவொன்றைத் தயாரிப்பதாகவே இருந்தது.
இதற்காக, வழிநடத்தல் குழுவின் உதவிக்காக, 10 பேரடங்கிய நிபுணர் குழுவொன்றிடம் பொறுப்புக் கையளிக்கப்பட்டிருந்தது. ஒரு வரைவொன்றை எங்களிடம் கையளித்துவிட்டு, அதிலிருந்தே நகல் வரைவைத் தயாரிப்பதற்கான பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நிபுணர் குழுவின் இந்தப் பணிகளின் போது, சில தடங்கல்கள் ஏற்பட்டன. அதையும் மீறி, அவர்கள் 10 பேரும் இணைந்து, எம்மிடம் ஒரு வரைவொன்றைக் கையளித்துள்ளார்கள்.
ஆனால் வழிநடத்தல் குழுவானது, நகலொன்றைத் தயாரிக்காது, நிபுணர் குழு கையளித்த அறிக்கையை வைத்துக்கொண்டு, அதன் உள்ளடக்கங்களுக்கான கருத்துகளை அறிவோம் என்று பரிந்துரை செய்தது.
அதை, கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே செய்திருக்கலாம். காலதாமதத்தை அடுத்து, இது தொடர்பில், கடந்த ஒக்டோபர் மாதத்தில் இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு, நவம்பரில் வெளியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும், ஒக்டோபர் 26 புரட்சி காரணமாக, அண்மையில் தான் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், நிபுணர்கள் தயாரித்த ஒரு நகல் வரைவொன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்த வரைவு, 2017 செப்டெம்பரில் வெளிவந்த இடைக்கால அறிக்கை, 6 உபகுழுக்களின் அறிக்கைகள், ஏழாவது குழுவின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான், நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாள்களில், இந்த அறிக்கையை வைத்து, ஒரு சட்டமூலம் தயாரிக்கப்பட வேண்டும். அந்தச் சட்டமூலத்தை, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவர வேண்டும். அது தான் நடைமுறை. இப்போது, இந்த வரைவை அடிப்படையாகக் கொண்டு, பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இடைக்கால அறிக்கை வந்தபோது எழாத விமர்சனங்கள், தற்போது எழுந்துள்ளன. அதனால், இதுபற்றி ஒழுங்கான பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டு, விளக்கமளிக்கப்பட வேண்டும். அந்த முயற்சி, ஓரளவு தற்போது முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.
ஆனால், உண்மை என்ன என்பது பற்றி, வரைவின் உள்ளடக்கம் என்னவென்பது பற்றிய தெளிவுபடுத்தல் அவசியம். இன்று விமர்சிப்பவர்களும் இணங்கியதால் தான், அரசமைப்புக்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டைப் பிரிக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் இதில் இல்லை. மறுபுறம், ஆட்சி முறைமை பற்றி, இந்த வரைவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, ஆட்சியை வர்ணிக்கும் சொற்கள் இதில் இல்லை.
அதனால், இரு புறத்தையும் சமாளித்துக்கொண்டு, இந்த வரைவைத் தயாரிப்பது, பெரும் சவாலுக்குரிய விடயமாக இன்று மாறியுள்ளது.
ஆனால், இதுபற்றி தெளிவுபடுத்தத் தெளிவுபடுத்த, நாட்டுக்குள்ளேயும் மக்களுக்கிடையேயும், விளக்கத்தை ஏற்படுத்த முடியும். அவ்வாறு தெளிவு ஏற்படும் போது, ஒரு சட்டமூலத்தைத் தயாரிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்!
Reviewed by Author
on
January 31, 2019
Rating:
Reviewed by Author
on
January 31, 2019
Rating:


No comments:
Post a Comment