தமிழரின் கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்த பிரிகேடியர்! பிரித்தானிய நீதிமன்றத்தின் உத்தரவு -
பிரித்தானியா, லண்டனில் வைத்து புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர தண்டனை முக்தி செல்லுபடியாகாது என இன்று அறிவித்திருக்கின்றார்.
“கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வாதாடிவந்த நிலையிலேயே லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் இந்த முடிவை அறிவித்திருக்கின்றார்.
லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கையின் 70ஆவது சுதந்திரத் தினமான 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 04ஆம் திகதி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், புலம்பெயர் தமிழர்கள் அங்கு கூடி கண்டனப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இது தொடர்பான காணொளி வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், இலங்கை அரசாங்கம் பிரிகேடியர் பிரியங்கவை மீள அழைத்துக்கொண்டது.
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ, கொலை அச்சுறுத்தல் விடுத்து பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தீர்ப்பளித்திருந்த லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், கடந்த ஜனவரி 21ஆம் திகதி அவரை கைதுசெய்யுமாறும் பிடியாணை பிறப்பித்திருந்தது.
பள்ளியகுரு விகோத் பிரியந்த பெரேரா, மயூரன் சதாநந்தன் மற்றும் கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணை செய்திருந்த நிலையிலேயே வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் இந்த உத்தரவவைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழரின் கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்த பிரிகேடியர்! பிரித்தானிய நீதிமன்றத்தின் உத்தரவு -
Reviewed by Author
on
March 02, 2019
Rating:
Reviewed by Author
on
March 02, 2019
Rating:


No comments:
Post a Comment