புற்றுநோய் பாதிப்பில் இலங்கைத் தமிழ் அகதி! சிறைப்படுத்தியிருக்கும் அவுஸ்திரேலியா -
சிவகுரு நவநீதராசா, இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் அகதி. 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர், தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இரத்தபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கான போராட்டத்துடன் தற்போது அவர் புற்றுநோயுடனும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக, அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து 2008ம் ஆண்டு வெளியேறியவர் மலேசியாவில் ஓர் ஆண்டுக்கு மேலாக அகதி அங்கீகாரம் வழங்கப்படாத சூழலில் வசித்து வந்திருக்கிறார்.
பின்னர், அவுஸ்திரேலியாவில் 2009ம் தஞ்சமடைந்த சிவகுரு நவநீதராசாவை கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைத்தது அவுஸ்திரேலிய அரசு, பின்னர் வில்லாவுட் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டார்.
அதன் பிறகு, கடந்த 2016 முதல் மெல்பேர்ன் குடிவரவு இடைமாற்று மையத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
2010ம் ஆண்டு நவநீதராசாவுக்கு அகதி அந்தஸ்து கிடைத்த நிலையில், ASIO எனப்படும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு அவரை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபராக அடையாளப்படுத்தியிருக்கின்றது.
அவர் முன்பு, தனி ஈழம் கோரி இலங்கையில் போரிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் செயல்பட்டதற்காக அவரை அச்சுறுத்தலான நபராக அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், அம்முடிவினை அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு 2016ல் ரத்து செய்த போதிலும் அவருக்கான பாதுகாப்பு விசா வழங்கப்படவில்லை.
இதையடுத்து 2017யில் காமன்வெல்த் மற்றும் குடிவரவு தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில், ராஜனின் தற்காலிக பாதுகாப்பு விசா விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறு பரிந்துரை செய்திருந்தது.
அத்துடன் அவரது உடல்நிலையும் மனநிலையும் மோசமான நிலையில் இருப்பதையும் அத்தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை இதனை கருத்தில் கொள்ளாமல் அந்த விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிராகரிப்பைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ள நவநீதராசா, தீர்ப்பாயத்தின் முடிவினை எதிர்நோக்கியிருக்கிறார்.
இந்த நிலையிலேயே அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை பெற்று வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ள நிலாந்தி கணபதிபிள்ளை, நவநீதராசாவை நேரில் சந்தித்ததை தொடர்ந்து அவரது நிலையை விளக்கியிருக்கிறார். அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என நிலாந்தி வலியுறுத்தியிருக்கிறார்.
மருத்துவ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நவநீதராசாவை விடுவித்து அவுஸ்திரேலிய சமூகத்துடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அகதிகள் நல செயல்பாட்டாளர்கள விடுத்துள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பில் இலங்கைத் தமிழ் அகதி! சிறைப்படுத்தியிருக்கும் அவுஸ்திரேலியா -
Reviewed by Author
on
April 28, 2019
Rating:

No comments:
Post a Comment