நிந்தவூர் பாதுகாப்பு இல்லங்களை கண்டுபிடித்த படையினர்! பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின -
நிந்தவூர் மற்றும், புத்தளம் - வணாத்துவில்லு பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு கண்டறியப்பட்டதுடன், அவற்றிலிருந்து ஆயுதங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர சோதனை நடத்திவருகிறார்கள். நாட்டில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
முப்படையினரும் இணைந்து மக்களின் பாதுகாப்பை பலப்படுத்திவரும் நிலையில், ஆங்காங்கே மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கைகளில் போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களும் படையினருக்கும், புலனாய்வு அதிகாரிகளுக்கும் சிக்கியுள்ளன.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரு காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் நிந்தவூர் மற்றும், புத்தளம் - வணாத்துவில்லு பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு கண்டறியப்பட்டன. அத்துடன் அவற்றிலிருந்து ஆயுதங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கபூர் மாமா எனப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை எனும் சந்தேக நபருக்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் காத்தான்குடி - மூன்றை சேர்ந்த 34 வயதான அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தவ்ஸ் எனவும் மற்றையவர் காத்தான்குடி தெற்கை சேர்ந்த 30 வயதான ஹம்சா மொஹிடீன் மொஹம்மட் இம்ரான் எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 நவம்பர் 30 ஆம் திகதி மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் பொலிஸ் காவலரணில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுட்டும் ஒருவரை கழுத்தறுத்தும் கொலை செய்து அவர்களது கடமை நேர ரிவோல்வர் ரக துப்பாக்கிகளை கடத்திச் சென்றமை தொடர்பில் முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மார்ச் 9 ஆம் திகதி, அமைச்சர் கபீர் ஹாசிம்மின் இணைப்பாளர்களில் ஒருவர் என கூறப்படும் மொஹம்மட் தஸ்லீம் என்பவரது வீட்டுக்குள் அத்துமீறி அவரைக் கொலை செய்ய முயற்சித்தமையும் இந்த சந்தேக நபர்களே என முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரைக் கொன்றுவிட்டு ரிவோல்வர் ரக துப்பாக்கிகளை எடுத்துச் சென்ற துப்பாக்கிகளில் ஒன்று என மேலதிக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல்களின் போது, மற்றுமொரு துப்பாக்கி நிந்தவூரிலும் மற்றையது புத்தளம் - வணாத்துவில்லு பகுதியிலும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து வவுணதீவில் பொலிசாரை கொலை செய்த பின்னர் அபகரிக்கப்பட்ட ரிவோல்வர்களில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆடைகள் உட்பட 4 தோட்டக்கள் என பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பின்னர் கபூர் மாமா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில், வணாத்துவில்லுவில் உள்ள பாதுகாப்பு இல்லம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சென்ற அதிரடிப் படையும் சி.ஐ.டி.யும் அந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது அவ் வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பீர்ப்பாய் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். அந்த பிளாஸ்டிக் பீர்ப்பாய்க்குள் இருந்து வவுணதீவு பொலிசார் கொலையின் பின்னர் அபகரிக்கப்பட்ட மற்றைய ரிவோல்வர் உட்பட எராளமான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சி.ஐ.டி.யால் மீட்கப்பட்டது.
இந்நிலையில் மேலதிக தேடுதல்கள் தொடரப்பட்டுவருகின்றன. கிழக்கில் பெரும் நாசகார வேலைகளை செய்வதற்கு இப்பிரிவினர் திட்டமிட்டதும், பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எனினும், தொடர்ச்சியான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் பாதுகாப்பு இல்லங்களை கண்டுபிடித்த படையினர்! பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின -
Reviewed by Author
on
April 29, 2019
Rating:
Reviewed by Author
on
April 29, 2019
Rating:


No comments:
Post a Comment