தோப்பில் முகமது மீரான்: தடையை உடைத்த எழுத்து.
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 75.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டனம் பகுதியைச் சேர்ந்த தோப்பில் முகமது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சு வண்ணம் தெரு என ஐந்த நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.
இது தவிர, மலையாளத்திலிருந்து ஐந்து படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இவரது சாய்வு நாற்காலி நாவலுக்கு 1977ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
தன்னுடைய ஊரான தேங்காய்ப்பட்டனத்தின் பின்புலத்தில் இஸ்லாமிய கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறையை தொடர்ந்து பதிவுசெய்துவந்தார் தோப்பில் முகமது மீரான்.
தேங்காய்ப்பட்டனத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்த தோப்பில், "நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமா கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்" என்று தெரிவித்தார்.
தனது தந்தை எம்.ஓ. முகமது அப்துல் காதர், கடலோர கிராமங்களைப் பற்றிச் சொன்ன கதைகளே ஒரு கடலோர கிராமத்தின் கதையாக விரிந்ததாக கூறும் தோப்பில், மலையாள எழுத்தாளரான பஷீரின் எழுத்துகள் தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறியிருக்கிறார்.
"இஸ்லாமியக் கலாச்சரம் அதன் உண்மையான வடிவத்தில் நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவானது மிகக் குறைவு. அந்தக் கலாச்சாரத்தை பொதுவெளிக்கு சிறப்பாக முன்வைத்தவர் தோப்பில். இஸ்லாம் குறித்து எழுதுவதில் இருந்த மனத் தடையை அவர்தான் முதன் முதலில் உடைத்தார். இஸ்லாம் சார்ந்த வாழ்வை அவர் தன் எழுத்தில் விமர்சன பூர்வமாக அணுகினார்.
அந்த மதத்தில் உள்ள அடிப்படைவாதத்தை, மதத்தின் பேரால் மக்களை ஒடுக்குவதை அவர் எழுதினார். அந்த வாழ்வில் உள்ள இருள் மிகுந்த பக்கங்களைச் சுட்டிக்காட்டினார். இஸ்லாமிய வாழ்வைப் பற்றி எழுதும்போது ஒன்று புனிதப் படுத்துகிறார்கள். அல்லது அவதூறு செய்கிறார்கள். இரண்டையும் செய்யாமல், அப்படியே எழுதியவர் தோப்பில். அவருக்குப் பிறகுதான் அந்தப் பாதையில் சல்மா, கீரனூர் ஜாஹீர் ராஜா ஆகியோர் உருவானார்கள்" என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.
ஆனாலும் தோப்பில் முகமது மீரான் முன்வைத்தது, வெறும் இஸ்லாம் சார்ந்த வாழ்க்கையை மட்டுமல்ல. தான் வாழ்ந்த நிலப்பரப்பு குறித்தும் ஒரு கவனம் அவருக்கு இருந்தது. அந்த மண் சார்ந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை மிக நுணுக்கமாக அவர் எழுதினார். தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. மலையாளத்தில் பஷீருக்கு கிடைத்த அங்கீகாரம் இங்கே தோப்பிலுக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி கிடைக்கவில்லை என்கிறார் மனுஷ்யபுத்திரன்.
தோப்பில் முகமது மீரான் மனைவி ஜலீலா, மகன்கள் ஷமீம் அஹமத், மிர்ஸாத் அகமது ஆகியோருடன் வாழ்ந்துவந்தார். சிறிய உடல் நலக் குறைவுக்குப் பிறகு மருத்துவமனையில் அவர் காலமானார்.
தோப்பில் முகமது மீரான்: தடையை உடைத்த எழுத்து.
Reviewed by Author
on
May 12, 2019
Rating:
Reviewed by Author
on
May 12, 2019
Rating:



No comments:
Post a Comment