தமிழர்களின் பூர்வீக இடங்கள் சிங்கள பெயர்களாக மாற்றம்! -துரைராசா ரவிகரன்
தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்தினை மறுசீரமைப்புச் செய்து, கிரி இப்பன் வெவ என சிங்கள பெயர் மாற்றி தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை சிங்கள மக்களுக்கு அபகரித்துக் கொடுத்ததன் மூலம் ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 08ம் திகதி நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன், மறுசீரமைக்கப்பட்ட மற்றும் புதிதாக நிறுவப்பட்ட கட்டடங்கள்,குளங்கள் என்பவற்றை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.
அந்த வகையில் வெலி ஓயா என்று தற்போது அழைக்கப்படும் தமிழர்களின் நிலப் பகுதியில் தமிழர்களின் பூர்வீக குளத்தை கிரி இப்பன் வெவ என்ற பெயரோடு திறந்து வைத்ததுடன், சிங்கள மக்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயலால் அப்பகுதியில் உள்ள காணிகளுக்கு உரித்துடைய தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் துரைராசா ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தினுடைய காணிக் கொள்கையானது இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய அறிக்கையில் கூட அது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள், மகாவலி (எல்) என்ற போர்வையிலே 1950,1960,1970ம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் காணிகள், தற்போது அபகரிக்கப்படுவதை பல தடவைகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக் காணிகளில் 1948ஆம் ஆண்டிற்கு முன்னைய காலப்பகுதி ஆவணங்கள் கூட ஒரு சிலர் தற்போதும் வைத்துள்ளனர். இந்நிலையில் காலங்காலமாக தமது வாழ்வாதாரத்தைப் பாவித்து வந்தவர்கள் இந்த நிலங்களை விட்டு 1984ஆம் ஆண்டு வலுக் கட்டாயமாக கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணிப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அரசாங்கக் கொள்கைகளில் ஒன்று, காணிக் கட்டளைச் சட்டத்தின் படி ஒரு காணிக்கு இரண்டு ஆவணங்கள் இருந்தால் காலத்தால் எது முந்தைய ஆவணமோ அந்த ஆவணத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுமென, அரசாங்கத்தினுடைய காணிக் கட்டளைச் சட்டத்தின் படி உள்ளது.
ஆனால் இவைகள் எல்லாம், அதாவது காணிக் கட்டளைச் சட்டமாக இருக்கட்டும் நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய பரிந்துரைகளாக இருக்கட்டும் எல்லாவற்றினையும் புறந்தள்ளி, தமிழ் மக்களினுடைய காணிகளை அபகரித்துச் சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி, வெலி ஓயா பிரதேசம் என்ற பெயரில் எங்களுடய மணலாற்றுப் பூமியை பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று குடியேற்றம் செய்யப்பட்ட ஒரு பிரதேசப் பிரிவாக இருக்கின்றது.
எங்களுடைய பூர்வீக நிலங்கள், எங்களுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தினை காப்பாற்றிய நிலங்களானவற்றில், ஒரு பகுதி அமையன் குளம் அதனோடு சேர்ந்திருந்த நிலங்கள், அதில் அன்று 360 ஏக்கர் நிலத்திற்குரிய பயனாளிகளுடைய பெயர்கள், பயனாளிகளுடைய உறவினர்களுடைய பெயர்கள் உட்பட்ட ஆவணங்கள் என்னிடம் இங்கே உள்ளன.
எங்களுடைய மக்கள் இன்று தங்களுடைய இந்தப் பிரச்சினைகளை தங்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையிலே எங்களுக்குத் தெரிவித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது, தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடாத்துவதற்கு நாதியற்றவர்களாகவும் அந்த மக்கள் காணப்படுகிறார்கள் என்பதை இதனூடாக தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பூர்வீக இடங்கள் சிங்கள பெயர்களாக மாற்றம்! -துரைராசா ரவிகரன்
Reviewed by Author
on
June 14, 2019
Rating:

No comments:
Post a Comment