ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வட மாகாணசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் முறைப்பாடு -
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வட மாகாணசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பிரிவிலேயே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிரான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேலும் தெரிவிக்கையில்,
முகநூலில் காணப்படும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் உரையின் காணொளியொன்றில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த ஓர் வழக்கு தொடர்பாக தான் நீதிபதியை மாற்றி தனக்கு சாதகமாக நீதிபதியைக் கொண்டு வந்து எழுதடா தீர்ப்பு என்று எழுத வைத்ததாக அவ்வுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இலங்கையின் நீதித்துறையையும் அதன் சுதந்திரத்தையும் அதன் கௌரவத்தையும் கேள்விக்குறியாக்கும் ஒரு விடயம்.
எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது அரசியல் பதவிகளை பாவித்து அல்லது துஸ்பிரயோகம் செய்து நீதித்துறை மீதும், சட்டம் ஒழுங்குத் துறை மீதும் வேறு ஏதாவது அழுத்தங்களை இதேபோல் பிரயோகித்திருக்கின்றாரா என்பதை ஆராயும் படியும் முறைப்பாட்டில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இதே போன்று எழுத்திலான முறைப்பாடு ஒன்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கும் என்னால் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹிஸ்புல்லாவின் உரையின் காணொளிப் பிரதிகள் பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கும்,நீதிச் சேவைச் ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் தவசராசா தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வட மாகாணசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் முறைப்பாடு -
Reviewed by Author
on
June 12, 2019
Rating:
Reviewed by Author
on
June 12, 2019
Rating:


No comments:
Post a Comment