அப்துல்கலாம் மீதான ஈர்ப்பு..சர்வதேச விண்வெளி பயிற்சிக்கு தெரிவான ஒரே தமிழக மாணவி! -
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரன். இவரது மகள் உதயகீர்த்தனா, அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்றார். இவருக்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதான ஈர்ப்பு காரணமாக, அவரைப் போலவே விஞ்ஞான ஆசை வந்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு, மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட உதயகீர்த்தனா, மாநில அளவில் முதல் பரிசை வென்றார்.
அதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டில் அதேபோன்ற மற்றொரு போட்டியிலும் முதல் பரிசை தட்டிச் சென்றார். இவரது கட்டுரையைக் கண்டு வியந்த ஆய்வாளர்கள், விண்வெளி ஆராய்ச்சி படிக்கும்படி கீர்த்தனாவை ஊக்கப்படுத்தியுள்ளனர்.

இதனால் கீர்த்தனாவுக்கு விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, 12ஆம் வகுப்பு முடிந்தவுடன், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான மேல் படிப்பை தொடரை நினைத்தார். ஆனால், அதற்கான பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில், தனது தந்தையுடன் சேர்ந்து அல்லிநகரம் முழுவதும் தெரிந்தவர்களின் உதவியைப் பெற்ற கீர்த்தனா, உக்ரைனில் உள்ள கார்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் சேர்ந்துள்ளார். அங்கு நன்றாக படித்து 90க்கும் அதிகமாக சதவிதத்தில் கீர்த்தனா தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போலந்து நாட்டின் அனலாக் வானியல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறவும், விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவிலேயே 20 மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து அதுவும் தமிழகத்தில் இருந்து தெரிவான ஒரே மாணவி இவர் தான்.

இதுகுறித்து உதயகீர்த்தனா கூறுகையில், ‘இதுவரை இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இரண்டு பெண்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்கள், அமெரிக்காவின் நாசாவில் இருந்துதான் சென்றனர்.
நானும் அவர்களைப் போல் விண்வெளிக்கு செல்ல வேண்டும். ஆனால், எனக்கு இந்தியாவின் இஸ்ரோ தளத்தில் இருந்து விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்பதுதான் ஆசை. அதுவே என் லட்சியம்’ என தெரிவித்துள்ளார்.
அப்துல்கலாம் மீதான ஈர்ப்பு..சர்வதேச விண்வெளி பயிற்சிக்கு தெரிவான ஒரே தமிழக மாணவி! -
Reviewed by Author
on
June 04, 2019
Rating:
No comments:
Post a Comment