தமிழ் அரசியல் வாதிகளாகிய நாங்கள் யாருக்காக பாடுபடுகிற்றோம்? சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி -
இலங்கை முழுவதுமான அண்மையமக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ் மக்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஒருகதை அடிபடுகிறது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இதனை கூறியுள்ளார். அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சில நேரங்களில் எமது சாதாரண மக்களின் வாழ்க்கையில் அவர்களின் தெரியாமையும், தடுமாற்றமும், குழப்பமும், கலக்கமும் அவர்களைப் பாடாய்படுத்துகின்றன. அவர்களின் அந்த நிலையைப் போக்க நாம் ஏதேனும் அறிவுரை வழங்கும் போது அவர்கள் தடுமாற்றம் மறைகின்றது.
அவ்வாறான ஒருகுழப்பநிலைக் கேள்வியும், அதற்களித்த பதிலுமே இவ்வாரக் கேள்விக்காத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக நடந்தனவற்றை ஏறக்குறைய நடந்ததுபோல் சம்பாஷணை ரூபமாகத் தருகின்றேன்.
“சேர்! நாங்கள் வன்னியில் இருந்து வருகின்றோம். காலையிலேயே வந்துவிட்டோம். ஆனால் உங்கள் பொலிஸார் எங்களை உள்ளே விடவில்லை. உங்களைச் சந்திக்க ஏற்கனவே நேரகாலம் நிர்ணயிக்கப்பட்டதா என்று கேட்டார்கள். ‘இல்லை’என்றதும் எம்மை உள்ளேவிடவில்லை”.
“CCTV ல் நீங்கள் வெகுநேரம் நின்றுகொண்டிருந்ததை அவதானித்தே உங்களை உள்ளே விடுமாறு பணித்தேன். உங்களைத் தெரியாத நிலையில் பாதுகாப்பின் நிமித்தம் நீங்கள் வந்தவுடனே உங்களை ஏற்கமுடியாது இருந்தது.
நீங்கள் யார்? எங்கிருந்துவருகின்றீர்கள், எப்பொழுது வருகின்றீர்கள் ,என்னவிடயமாகப் பேச இருக்கின்றீர்கள் என்பது பற்றி விபரங்களைத்தந்து உங்கள் தொலைபேசி இலக்கத்தையுந் தந்து ஒருகடிதம் அனுப்பினீர்கள் என்றால் என்னைச் சந்திக்க ஒருநாள் நேரம் தரமுடியும் அல்லது எமது காரியாலயத்திற்கு தொலைபேசி ஊடாகப் பேசி ஆயத்தங்களைச் செய்துகொண்டும் வரலாம்.
சரிசொல்லுங்கள்! என்ன விடயமாக என்னைச் சந்திக்க வந்திருக்கின்றீர்கள்?
“ஐயா! நாங்கள் பல வருட நண்பர்கள். என்னுடைய காணி பரம்பரைக் காணி. ஐந்து ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. இங்கிருக்கும் என் நண்பருக்கு 25 ஏக்கர் காணிசொந்தமாக இருக்கின்றது.
அரச கொடையாகக் கிடைத்தது (Grant). அதனைநான் தான் பார்த்துவருகின்றேன். எங்கள் காணி அவரின் காணிக்குக்கிட்டத்தான் இருக்கின்றது. அவர் இருப்பது கொழும்பில். எங்கள் இருவரதும் பிள்ளைகள் வெளிநாட்டில்”
“உங்கள் பிரச்சனை என்ன?”என்றுகேட்டேன்.
கொழும்பில் வசிப்பவர் கூறினார் -
‘சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் இங்கிருக்கும் என் நண்பர் எனது காணியை வாங்குவதாகக் கூறினார். தொகையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர் இதுவரையில் வாங்கவில்லை. பாதித் தொகைதான் சேர்ந்துள்ளது என்கின்றார்.
அண்மையில் வேற்று இனத்தைச் சேர்ந்த ஒருவர் கூடியவிலைகொடுத்து எம் காணியை வாங்கமுன் வந்துள்ளார். இன்னும் ஒருமாதத்தில் எனது காணியை வாங்காவிடில் அதனை அந்த வெளியூர்க்காரருக்கு விற்பதாக நான் என் நண்பரிடம் கூறினேன்.
அவர் மேலும் ஆறு மாதம்கால அவகாசம் கேட்கின்றார். உடனே நான் என் காணியைவிற்க வேண்டியுள்ளது. பணம் தேவைப்படுகிறது. எனக்கு நண்பரின் நிலைவிளங்குகின்றது. அவருக்கு அவரின் மகன் அனுப்பும் பணம் வெளிநாட்டில் இருந்து வரவேண்டும்.
திருமணம் செய்திருக்கும் அவர் மகன் ஒருகு றிப்பிட்டதொகையையே அனுப்பக்கூடியதாக இருக்கின்றது. அதைவைத்துப் பார்த்தால் இன்னும் இரண்டு வருடங்கள் எடுக்கும் என் நண்பர் என்காணியை வாங்க. எனக்குப் பணம் அவசரமாகத் தேவையாக உள்ளது.
“காணியை நீங்கள் விற்கலாமா?”நான் கேட்டேன்.
“அரசகொடை (Grant) என்பதால் திணைக்களத்திற்கு அறிவித்து விட்டு என்னால் விற்கமுடியும். அதுவும் என் நண்பர் அந்த இடத்திலேயே வசிக்கின்றார்.”
“அவ்வாறு விற்கமுடியுமா என்று அறிந்து உரிய அனுமதியைப் பெற்ற பின்னர் நீங்கள் உங்கள் காணியை உங்கள் நண்பருக்கு முன்னர் உடன்பட்ட தொகைக்கு விற்று அவர் தரும் பாதித் தொகையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இப்போது உங்களுக்கு அந்தப்பாதித் தொகை உங்கள் கஷ்டத்தை நீக்கப் போதுமாகுமா?”
“ஓம்ஓம் அதுபோதும்! ஆனால் என்மிகுதிப் பணத்திற்கு என்னசெய்ய?”
“காணியை வாங்கிய உங்கள் நண்பர் அதே காணியை உங்களுக்கு மிகுதிப் பணத்திற்காக அதேநேரத்தில் ஈட்டில் வைப்பார். அந்தப் பணத்தை ஒருநியாயமான வட்டியுடன் இனிவரும் இருவருடங்களுக்குள் கட்டிமுடிக்க ஒரு உடன்பாட்டை செய்துகொள்ளுங்கள்.
ஆனால் ஈட்டுறுதி பணத்தைத் திருப்பிக்கேட்டதும் அதனை உடனே கொடுக்கவேண்டிய கடப்பாட்டுடன் தான் தயாரித்து கையெழுத்திட வேண்டும்.
உடன்பாட்டின் பிரகாரம் மாதா மாதம் அல்லது 3 மாதத்திற்கொரு முறை ஈட்டுத்தொகையில் ஒரு தொகையையும் அதற்கான வட்டியையும் கட்டும் விதமாக ஒத்துக்கொள்ளலாம்.
அவர் கூறுவதுபோல் 6 மாதத்திற்குள் பணம் கிடைத்தால் உடனே மிகுதிப்பணத்தையும் வட்டியையும் கட்டி விட்டு ஈட்டுறுதியை வலுவிழக்கச் செய்துகொள்ளலாம். இதனால் உங்கள் இருவருக்கும் நன்மைகிடைக்கும்.
அறுதியுறுதி உங்கள் நண்பர் பெயரில் முடித்துக் கொண்டால் அவரால் வங்கிக் கடன்பெற முடியும். வலுவில் இருக்கும் கடனைத் திருப்பிக்கட்ட வங்கிக் கடன்கள் தரப்படலாம்.
அத்துடன் காணி அவர் பெயரில் இருப்பதால் தொழில்மேம்பாட்டிற்கு என்று அரசாங்கம் வகுத்திருக்கும் திட்டங்களின் கீழ் அரச உதவிபெற முடியும்.
உங்களைப் பொறுத்தவரையில் உங்களின் உடன் தேவைக்கு நண்பரால் தரப்படும் அறுதித் தொகையின் அரைவாசித் தொகைபோதுமானதாக இருக்கும்.
காணியின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றி நீங்கள இனிக் கவலைப்படத் தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரையில், அதாவது அரசியல் வாதிகளாகிய எங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் பிறமாவட்டத்தாருக்குக் காணியை விற்பது இந்த செயற்பாட்டால் தடுக்கப்படும்.
கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் மக்களின் காணிகள் சந்தைவிலையிலும் பார்க்க அதிகவிலை கொடுத்துப் பிறரால் வாங்கப்படுகின்றன. எம்மவர் காசை எடுத்துக் கொண்டு பிறநாடுகளுக்குசெல்ல எத்தனிக்கின்றார்கள்.
இலங்கை முழுவதுமான அண்மையமக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ் மக்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஒருகதை அடிபடுகிறது. இன்னும் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு விபரங்கள் கைக்குகிடைக்கவில்லை.
இவ்வாறு காணிகளை விற்றுவிட்டு எம்மவர் வெளிநாட்டுக்குச் சென்றால் யாருக்காக தமிழ் அரசியல் வாதிகளாகிய நாங்கள் பாடுபடுகிற்றோம்?” என்று கேட்டேன். இருவரும் நன்றியைத் தெரிவித்து விட்டுமன நிறைவுடன் திரும்பினர்.
தமிழ் அரசியல் வாதிகளாகிய நாங்கள் யாருக்காக பாடுபடுகிற்றோம்? சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி -
Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment