விக்ரம் லேண்டரின் நிலை என்ன? - இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன அடுத்த அப்டேட்
``விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது வெறும் 5 சதவிகித தோல்வியே. நிலவில் கால்பதிக்கும் திட்டத்தில் 95 சதவிகிதம் வெற்றிபெற்றுவிட்டோம்.''
சந்திரயான்-2 விண்கலனுடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் ஜூலை 22 விண்ணில் சீறிப் பாய்ந்ததிலிருந்தே இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்கக் காரணம் இதுவரை யாரும் தடம் பதிக்காத நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 தரையிறங்கவிருந்தது தான். நேற்று இரவு இந்தச் சாதனை நிகழ்த்தப்படவிருந்த நிலையில் `சந்திரயான் 2' நிலவின் தென் துருவத்தை நெருங்கும் வேளையில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் லேண்டருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோமீட்டர் உயரம்வரை எதிர்பார்த்ததைப்போலவே லேண்டர் பயணித்திருக்கிறது. அதற்குபின் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னடைவால் இஸ்ரோ விஞ்ஞானிகள் துவண்டிருக்க அவர்களின் கடும் உழைப்பை பிரபலங்கள் உட்பட சாதாரண மக்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டானது குறித்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் திரட்டி வருகின்றனர். இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ அதிகாரிகள், ``விக்ரம் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது வெறும் 5 சதவிகித தோல்வியே. நிலவில் கால்பதிக்கும் திட்டத்தில் 95 சதவிகிதம் வெற்றிபெற்றுவிட்டோம்.
விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. சுற்றுவட்ட பாதையில் மிகவும் பாதுகாப்பாகச் சுற்றிவருகிறது. சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் நிலவை அடுத்த ஒரு வருடத்துக்குச் சுற்றிவரும். இந்த ஆர்பிட்டர் நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு படம்பிடித்து அனுப்பும். இதைக்கொண்டு தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரையும் ஆர்பிட்டரால் படம்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் லேண்டரின் நிலை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கும்'' எனப் பிடிஐ நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்..
விக்ரம் லேண்டரின் நிலை என்ன? - இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன அடுத்த அப்டேட்
Reviewed by Author
on
September 07, 2019
Rating:
Reviewed by Author
on
September 07, 2019
Rating:


No comments:
Post a Comment