மகிந்தவின் ஆட்சியிலேயே இன்று இருந்தவன் நாளை இல்லாமல் ஆக்கப்பட்டான்! கோடீஸ்வரன் -
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இன்று இருந்தவன் நாளை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறான். அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெற கூடாதென்பதே எமது நோக்கம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தொனிப்பொருளின் கீழ் கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வகுப்பறை கட்டடம், ஆசிரியர் விடுதி என்பனவற்றினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலமென்பது கல்வி சிறார்களின் கையிலிருக்கின்றது. நாட்டை சரிவர நிர்வகிக்கின்ற திறன் எதிர்கால சிறார்களின் கரங்களிலே இருக்கின்றது.
மேலைத்தேய நாடுகள் கல்வி ரீதியான வளர்ச்சியில் உச்சத்தை எட்டியிருக்கும் காலகட்டத்தில் நாம் அவர்களுடன் போட்டிபோட வேண்டியிருக்கிறது.
கல்வி ரீதியான வளர்ச்சியில் மேலைத்தேய நாடுகள் பாரிய பொருளாதார ,தொழில்நுட்ப ,விவசாய வளர்ச்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் இன்னும் தொழில்நுட்ப ரீதியில் பூரண வளர்ச்சிபெறவில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சியை அடையும் போதே நாடு வளம் பெறும். அதனூடாகவே தனிநபர் வருமானம் உச்சம் பெறும்.
ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரம் இந்த ஆட்சிக்காலத்தில் தான் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகவியல் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது.
வெள்ளை வான் கலாச்சாரம் ஏனைய கடத்தல்கள் அத்துமீறிய செயற்பாடுகள் மூலம் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். ஆனால் இந்த ஆட்சிக்காலத்தில் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை சொல்லக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த ஆட்சி வழங்கி இருக்கிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ , தனி நபரோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை இருந்து அதனை மீறி செயற்பட்டால் இருப்பு குறித்தும் கேள்விகள் எழுந்தன.
இன்று இருந்தவன் நாளை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறான் அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெற கூடாதென்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் ஆட்சியிலேயே இன்று இருந்தவன் நாளை இல்லாமல் ஆக்கப்பட்டான்! கோடீஸ்வரன் -
Reviewed by Author
on
September 10, 2019
Rating:

No comments:
Post a Comment