மக்கள் எழுச்சி பேரணியூடாக தெளிவான செய்தி வழங்கப்படும்: சிவசக்தி ஆனந்தன் எம்பி -
தெற்கிலே இருக்ககூடிய ஐனாதிபதி வேட்பாளர்களிற்கும் சரி, அல்லது தொடர்ச்சியாக தமிழ்மக்களை ஏமாற்றி கொண்டிருக்க கூடியவர்களிற்கும் சரி ஒரு தெளிவான செய்தியை எழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணியூடாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் பேரவை இரண்டு மாபெரும் மக்கள் பேரணியை நடாத்தியிருக்கிறது. தமிழ் மக்களிற்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வு வரைபொன்றை அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது.
பேரவையால் உருவாக்கப்பட்ட தீர்வு வரைபை அடியொற்றி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால் ஏகமனதாக மற்றொரு தீர்வு திட்டம் தயாரிக்கப்பட்டு அதுவும் அரசாங்கத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட விடயங்களை அடியொற்றியே இந்த தீர்வு திட்டங்கள் தயாரிக்கபட்டிருந்தது.
எனவே தமிழ் மக்கள் சார்பில் நாடாளுமன்றம் சென்றவர்கள் அவர்களால் முன் வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக இந்த நான்கரை வருடம் அரசாங்கத்தை பாதுகாத்துவிட்டு தற்போது ஐனாதிபதி, பிரதமர் ஆகியோர் எங்களை ஏமாற்றி விட்டார்கள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முதுகெலும்பு அவர்களிற்கு இல்லை என்று கூறி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
அதன்பின்னரும் தற்போது நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் போட்டியிட்டால் என்ன சஜித் போட்டியிட்டால் என்ன மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பின்னாலும், யானைக்கு பின்னாலும் சென்று வாக்களிக்கும்படி தான் கேட்கிறார்கள்.
நாங்கள் நபர்களை நம்பி இனிமேலும் வாக்களிக்க முடியாது. தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளான காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை. காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நிரந்தரமான தீர்வினை வழங்குதல்.
வடகிழக்கில் தொல்பொருட் திணைக்களம் மற்றும் வனவளதிணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தெற்கில் இருக்ககூடிய ஜனாதிபதி வேட்பாளர்களிற்கும் சரி அல்லது தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருக்க கூடியவர்களிற்கும் சரி ஒரு தெளிவான செய்தியை மக்கள் எழுச்சி பேரணியூடாக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் நடாத்தப்படவுள்ள பேரணியை வவுனியாவில் ஒழுங்குபடுத்தும் முகமாக மாணிக்கம் ஜெகன், சபேசன், சிறி, றேகன் ஆகியோரை உள்ளடக்கிய தலைமை குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச மட்டத்திற்கும் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் பேரணி தொடர்பாக தெளிவூட்டுவதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் எழுச்சி பேரணியூடாக தெளிவான செய்தி வழங்கப்படும்: சிவசக்தி ஆனந்தன் எம்பி -
Reviewed by Author
on
September 08, 2019
Rating:

No comments:
Post a Comment