கொடூரமானவர்களை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றப்போகின்றோமா? சுமந்திரன் கேள்வி -
கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்க்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்க வேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தொடர்ந்தும் கொடூரமான குடும்ப ஆட்சியைத் தக்கவைப்பதற்காக, பொதுஜனபெரமுன தரப்பினர் குடும்ப உறுப்பினரான கோத்தபாய ராஜபக்சவை இம்முறை களமிறக்குகின்றனர்.
இந்த வேளையில் இது சிங்கள மக்களுக்கான தேர்தல், சிங்கள தலைவர்களுக்கான தேர்தல் எனவே இந்த தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டுமென சிலர் கூறுகின்றனர்.
சிலர் யாருக்கென்றாலும் பரவாயில்லை, வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறான கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.
எமது குடும்பத்தைக் கொன்றொழித்த ராஜபக்ச குடும்பம் எவ்வாறு 2005ம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறியது என்று நாம் பார்க்கவேண்டும். அந்த தேர்தலில் எங்களுடைய வாக்களிப்பு தவிர்ப்பினால் தான் ராஜபக்ச குடும்பம் ஆட்சிபீடம் ஏறியது.
ராஜபக்ச குடும்பம் தமிழ் மக்கள் வேண்டாமென ஒதுக்கினார்கள். அவ்வாறு எந்த மக்களை வேண்டாமென ஒதுக்கினார்களோ, அந்த தமிழ் மக்களாலேயே அவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
நான் ஈழத்தின் வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்டேன் என மகிந்த ராஜபக்ச உரை நிகழ்த்தினார்.எங்களுடைய ஒரே ஆயுதம் வாக்குரிமையாகும். அதை பகிஸ்கரிக்க வேண்டும், அல்லது அந்த ஆயுதத்தை பாவிக்கக் கூடாதெனக் கூறுவதற்கு எவருக்கும் அருகதையில்லை.
இந்தத் தேர்தலைப் பொறுத்த வரையிலே 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவர் நிச்சயமாக ஜனாதிபதியாக வருவார்.
தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக, ஜனாதிபதி தேர்வு செய்யப்படமாட்டார் என்றில்லை. எனவே தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.
கோத்தபாய ராஜபக்ச என்பவர், ராஜபக்ச குடும்பத்திலேயே மிகவும் மோசமான ஒருவராவர். கடந்த கால யுத்தமும் அவருடையது தான். கடந்த காலங்களில் "இது கோத்தபாயவின் யுத்தம்" என்ற நூலும் வெளியிடப்பட்டது.
எனவே தமிழ் மக்களாகிய நாம், வாக்களிக்காமல் பகிஸ்கரிப்புச் செய்து அத்தகைய கொடூரமானவர்களை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றப்போகின்றோமா.?
இந்த தேர்தல் வெள்ளத்தை தடுப்பதற்கு அமைக்கப்டுகின்ற பாதுகாப்பு அணைக்கட்டு போன்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும் சரியான முறையில் இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.
அரசியல் தீர்வு தொடர்பாக, ஒருமித்த பிளவு படாத நாட்டிற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி முன்வைத்துள்ளார்.
இவ்வாறாக வாக்குறுதி வழங்குவதற்காவது அவருக்கு துணிவிருக்கின்றது. அவ்வாறான தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வாக்குறுதிகள் எதுவும் கோத்தபாயவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை.அதற்கான துணிவும் அவரிடம் இல்லை.
தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டுமென கோரிக்கையாக கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கொடூரமானவர்களை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றப்போகின்றோமா? சுமந்திரன் கேள்வி -
Reviewed by Author
on
November 10, 2019
Rating:
Reviewed by Author
on
November 10, 2019
Rating:


No comments:
Post a Comment