சுவிஸ்-பேர்ன் பிறேம் கார்ரென் நீத்தார் திடலில் தமிழ்க்கோவில்!
இப்பெரும் மாதத்தில் சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் பெருந்தேவி காளியம்மை பெருந்தேவன் வைரவர் திருக்கோவில் சைவ நெறிக்கூடத்தின் செந்தமிழ் அருட்சுனையர்களால் திருக்குடமுழுக்கு திருச்சடங்குகள் தமிழால் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றப்பட்டுள்ளது.
இயற்கை எய்தும் உயிர்கள் உரிய மதிப்புடன் விடைபெற இது வழிசெய்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் அதன் நகரசபை சைவத்தமிழ் மக்கள் நீத்தார் வழிபாட்டின் உரிய மதிப்புடன் ஆற்றுவதற்கும், நீத்தார் நிகழ்வின் நிறைவில் சுடலைவைரவரிற்கு வழிபாட்டினை ஆற்றுவதற்கும் வழி செய்து கொடுத்துள்ளார்கள்.
பிறேம்கார்டன் இடு காட்டில் சைவ சமயத்தவர்களுக்கும் ஒரு இடம் வழங்கப்பட்டு ஐந்து சமயத்தவர்கள் தமது நீத்தார் கடனை ஆற்றுவதற்கு வழிசெய்து கொடுத்துள்ள நகரமாக இத்தால் பேர்ன் நகரம் விளங்குகின்றது.
இங்கு உள்ள மண்டபத்தில் இறுதி நிகழ்வுகள் ஆற்றப்பட்டு, சிதை நெருப்பில் கடன் ஆற்ற முன்னரும், சாம்பல் எடுத்து வரும் வேளையிலும் இவ் வைரவர் முன்னால் வழிபாட்டினை ஆற்ற வழி செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கருங்கற்களால் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஈழத்திலும், சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரிலும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் கட்டுமானப்பணியினை முன்னெடுத்த தமிழ் நாட்டைச் சேரந்த திருநிறை. புருசோத்தமன் கலியப்பெருமாள் குழுவில் இருந்து ரட்ணசாமி ராஜ்குமார் மற்றும் அழகப்பன் மாரியப்பன் அவர்கள் சுவிற்சர்லாந்திற்கு வருகை அளித்து ஒரு மாதத்தில் இக்கோவிலை கட்டு முடித்துள்ளனர்.
பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தொடண்டர்கள் பலர் இத் திருப்பணியில் பங்கெடுத்திருந்தனர்.
80களில் தமிழர்கள் வெறும் கையுடன் சுவிற்சர்லாந்தில் ஏதிலிகளாக வந்திருந்தனர். இன்று 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் பெருந்தொகையில் மீண்டும் தாயகம் திரும்பும் எண்ணத்தைப் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கவில்லை என்பதை சுவிற்சர்லாந்தின் செஞ்சிலுவைச்சங்கம் 2018ல் வெளியிட்ட அறிக்கை எடுத்துக் காட்டியிருக்கிறது.
10,000 மேற்பட்ட தமிழர்கள் கடந்த ஆண்டு 65 அகவையினைக் கடந்து ஓய்வூதிய வயதினை எட்டியுள்ளார்கள். சுவிசில் 23இற்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பினும் இறப்பு நிகழும் போது சைவத் தமிழர்கள் உரிய மதகுருவினைத் தம் நீத்தார் சடங்கு ஆற்றுவதற்கு பெறுவதில் தட்டுப்பாடே நிலவுகிறது.
முதன் முறையாக ஈழத்தமிழ் மன்றமாகிய சைவநெறிக் கூடமும், பேர்ன் நகரசபையும் இணைந்து முயன்று இன்று சுடலையில் வைரவர் கோவில் அமைந்துள்ளது. தூர நோக்கில் நீத்தார் கடன் ஆற்றுவதற்கு உரிய சமயக் குருமார்களை உருவாக்குவது அல்லது ஈழத்தில் இருந்து அழைப்பது எனும் நோக்கில் சைவ நெறிக்கூடம் பணி செய்யவுள்ளது.
பேர்ன் நகர சபையானது 2020ம் ஆண்டிற்குள் பிறேம் கார்டென் இடுகாட்டில் ஐந்து சமயத்தவர்களுக்கும் உரிய மதிப்பளித்து இடங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது.
இந்நோக்கு 15. 11. 19 நிறைவேறியுள்ளது. காலை முதல் சடங்குகள் நடைபெற்று 11.00 மணிக்கு திருக்குடமுழுக்கு நிறைவுற்றது. அடுத்து பேர்ன் நகரசபையுடன் சைவ நெறிக்கூடம் இணைந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தனர். சைவநெறிக்கூடத்தின் சார்பில் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்கப்பெற்றுள்ளது.
பிறேம் கார்டன் இடுகாட்டில் 1871ம் ஆண்டு முதல் யூத சமயத்தவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கும் மெக்கா நகரின் திருச்சியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பௌத்தர்களுக்கும் இன்று சைவ (இந்து) சமயத்தவர்களுக்கும் இங்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பேர்ன் ஊராட்சி மன்றம், நகரசபை, மாநில மற்றும் நடுவன் அரச பணயில் இருந்தும் பலர் பங்கெடுத்திருந்ததுடன், நிறைவில் வரவேற்புத் திடலில் நண்பகல் உணவு அளித்து நிகழ்வு நிறைவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்-பேர்ன் பிறேம் கார்ரென் நீத்தார் திடலில் தமிழ்க்கோவில்!
Reviewed by Author
on
November 19, 2019
Rating:

No comments:
Post a Comment