மாவை சேனாதிராஜா அறைகூவல்-அடக்குமுறைக்கு எதிராக மக்களை அணி திரட்டுங்கள்!
எமது இனத்திற்கு விரோதமாக இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு எமது கட்சியின் இளைஞர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மற்றும் மகளிர் அணியின் ஏற்பாட்டில் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இனப்பிரச்சினைக்கு சமஸ்டி கட்டமைப்பில் ஒரு தீர்வு வரவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கைக்காக 55 இலட்சம் மக்கள் இந்த நாட்டிலே வாக்களித்திருக்கிறார்கள்.
முஸ்லிம், தமிழ், மலையக மக்கள் என நீதி நியாயம் தெரிந்தவர்கள் ஒன்றுபட்டு வாக்களித்துள்ளார்கள்.
குறிப்பாக நாற்பது இலட்சத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஒரு பௌத்த சிங்களவராக இருக்கின்ற வேட்பாளர் எமது இனத்தின் சார்பில் முன்வைத்த அந்த தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம் கருதியே அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆகையால் நாம் தோற்று விட்டோம் என்று நீங்கள் பின்னோக்கி பார்க்க தேவையில்லை. இது சிறிய விடயம் இல்லை.
நாம் எதிர்பார்த்தது போல தனது குடும்பத்தை போர்குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காக பலவிடயங்களை கோட்டாபய ராஜபக்ச தற்போது செய்து கொண்டிருக்கிறார்.
பல கைதுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு குழப்பமான நிலை உருவாக்கப்படுகிறது.
வருகின்ற தேர்தல் வரைக்கும் அதை இன்னும் தீவிரப்படுத்துவார்கள். அதற்கு பிறகு என்ன செய்வார்கள், எப்படி அவர்களது அரசை நடத்த முடியும் என்பது பெரும் கேள்வியாகவே இருக்கிறது.
இந்த அரசு எமது இனத்திற்கு விரோதமாக எடுக்கின்ற நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு எமது கட்சியின் இளைஞர்கள், தொண்டர்கள் கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
எம்மை நாம் ஆயத்தம் செய்வதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும். தைரியத்தை இழந்து விடாதீர்கள் அது எப்போது தேவையோ அதனை நிரூபிக்கின்ற போது நாம் அதனை தீர்மானிப்போம்.
எனவே எதற்கும் தாயாராக எமது மக்களை அணிதிரட்ட வேண்டும் என்பது தான் இன்று எனது செய்தியாக இருக்கும். மாறாக வாக்கு கேட்டு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜா அறைகூவல்-அடக்குமுறைக்கு எதிராக மக்களை அணி திரட்டுங்கள்!
Reviewed by Author
on
December 30, 2019
Rating:

No comments:
Post a Comment