வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்-மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் -
எமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் தேடவேண்டும். இதனை அனைவரும் உணரவேண்டும்.
இதற்கு எமது கட்சி ஒரு ஆரம்பமாகும் என்று மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போவிந்தன் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று, புதிதாக மீன் சின்னத்துடன் மக்கள் முன்னேற்றக் கட்சி எனும் கட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது கட்சியின் 23 காரியாலயங்களை கிழக்கில் திறக்கவுள்ளோம். தற்போது கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் பாரிய சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் குடிப்பரம்பலும், பொருளாதாரமும், இளைஞர் யுவதிகளின் எதிர்காலமும், சின்னாபின்னமாகி கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றது.
இவை அனைத்திற்கும் கிழக்கு மக்களின் முன்னேற்றத்திற்கும் எமது கட்சி எதிர்காலத்தில் ஒரு முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் அரசியலில் பிரவேசிக்கின்றோம்.
அரசியல் பொருளாதார, சுய நிர்ணய உரிமைகள் அனைத்தையும் ஒரு புதிய வழிப்பாதையில் நாங்கள் நிவர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் தற்போது ஓர் புதிய பரிமாணத்தை ஆரம்பிக்கின்றோம்.
புதிய அரசியல் கட்சிகளின் தேவை ஏற்படாவிடின் புதிய அரசியல் கட்சிகள் உருவாக முடியாது. தற்போது கிழக்கு மண்ணில் பல தேவைகள் இருக்கின்றன.
அதனை நிவர்த்தி செய்வதற்குரிய அரசியல் கட்சிகள் இல்லாத நிலையில், மக்கள் முன்னேற்றக் கட்சி போன்ற பல கட்சிகள் உருவாகின்றன.
புதிய அரசியல் கட்சிகள் உருவாவதால் வாக்குகள் சிதைவடையும் என்ற கருத்துக்களுக்கு அப்பால் சென்று எமது அரசியல் நகர்வு தெளிவாக இருந்தால் வாக்குகள் ஒருபோதும் சிதைவடையாது.
நாங்கள் கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தனித்து நின்று செயற்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளோம். எங்கள் முன்னெடுப்புக்களால் தமிழ் மக்களின் இருப்புக்கள் ஒருபோதும் பறிபோகாது.
எமது கட்சி கிழக்கை மையமாக வைத்துத்தான் செயற்படும். ஏனெனில் வடக்கில் அரசியல் செய்வதற்கு அதிகளவு கட்சிகள் உள்ளன. ஆனால் எமது கட்சியும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும், என்றுதான் செயற்படுகின்றது.
தமிழர்களின் அபிலாசைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவை மேற்கொள்ளப்படாதவிடத்து, எமது இருப்பையும், எதிர்காலத்தையும், பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது. அது எமது வரலாற்றுக் கடமையும் கூட.
வடக்கு, கிழக்கு இணைந்த பின்னர்தான் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்குச் சாதகமான விடயமாக இருக்கும். எனவே வடக்கு, கிழக்கு இணைந்த பின்னர் காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடைக்கப்பெற வேண்டும் அவ்வாறு இணையாதவிடத்து அந்த அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கினால் அது கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு பேராபத்தாக அமைந்துவிடும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்-மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் -
Reviewed by Author
on
January 28, 2020
Rating:
Reviewed by Author
on
January 28, 2020
Rating:


No comments:
Post a Comment