தமிழர்களின் அடுத்த தலைவர் சுமந்திரனா? சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ள விடயம் -
தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறிய நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ள போது, தமிழ் மக்களை தலைமை தாங்கப் போவது சுமந்திரனா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல் எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய இன்னும் பலர் இணைந்து "தமிழர் ஐக்கிய முன்னணி" என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு - தண்ணீரூற்று பகுதியில் இன்று கட்சியினுடைய அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இப்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள அரச தலைவர், தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டதாகவும், எனவே அதற்கு தான் கடமைப்பட்டுள்ளதாகவும், ஆகையால் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆணைகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.
சில வேளைகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அவருக்கொரு ஆணையை வழங்கியிருக்கலாம், ஆனால் அதே சமயம் வடக்கு, கிழக்கிலுள்ள மற்றொரு தேசிய இனமான, தமிழ் தேசிய இனம் என்பது இன்னுமொரு ஆணையைக் கொடுத்திருக்கின்றது.
எமது இனம், மொழி, நிலம் என்பன காப்பாற்றப்பட வேண்டும், எமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும், அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் இதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஆகவே ஒட்டுமொத்தமாக நாட்டினுடைய அரச தலைவர் எனச் சொல்லக்கூடிய ஒருவர், வெறுமனே சிங்கள மக்கள் கொடுத்த ஆணையினை மாத்திரமல்ல, அவருக்கு எதிராகவே இருந்தாலும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும் பரிசீலிக்க வேண்டும்.
இந்த நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்குமான அரச தலைவராக அவர் இருந்தால், அவர் இவ்வாறான விடயங்களை நிராகரிக்க முடியாது.
ஒவ்வொரு காலகட்டங்களிலும் வருகின்ற அரசுகள், இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை இருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்கின்றனர். பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக குழுக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுக்களால் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டாலும், எந்த சிங்களத் தலைமைக்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திராணியோ, பக்குவமோ கிடையாது. அதனைப் போட்டு மிதித்து இல்லாமல் செய்கின்ற போக்கைத்தான் நாம் தொடர்ச்சியாக பார்க்க கூடியதாகவுள்ளது.
தற்போது வந்திருக்கக்கூடிய கோட்டாபயவின் தலைமை என்பது, எல்லாவற்றினையும் நிராகரித்ததுடன், தற்போது பிரச்சினை என்று எதுவும் கிடையாது, அபிவிருத்தி செய்தால் போதுமானது அந்த அபிவிருத்தியை தாம் செய்வதாக கூறுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்களின் அடுத்த தலைவர் சுமந்திரனா? சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ள விடயம் -
Reviewed by Author
on
January 06, 2020
Rating:
Reviewed by Author
on
January 06, 2020
Rating:


No comments:
Post a Comment