ஐ.நா. மனித உரிமை சபையின் கூட்டத்தொடர் ஆரம்பம்! விவாதத்திற்கு வரும் இலங்கை விவகாரம் -
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத் தொடர் 24-02-2020 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரங்கள் குறித்த விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அரசின் தரப்பிலிருந்தும், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்தும் முக்கியஸ்தர்கள் ஜெனிவா செல்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஊடாக இழைக்கப்பட்ட விடயங்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் தரப்பு தொடர்ச்சியாக எதிர்பார்த்திருக்கின்ற நிலையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான அரசு அத்தீர்மானத்திலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதோடு அமைச்சரவையிலும் முடிவை எடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில் அரசின் அறிவிப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 2012ஆம் ஆண்டு முதல் மிகக் கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.
இந்தநிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி அதன் ஏகோபித்த இணை அனுசரணையுடன் 30/01 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்து.
இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு தவறியதன் காரணமாக தொடர்ச்சியாக 30/01 தீர்மானத்தை நீடித்து அதனை நடைமுறைப்படுத்துவற்கான கால அவகாசம் வழங்கப்படும் தீர்மானம் (40/01) நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது அரசு ஐ.நா. தீர்மானத்திலிருந்து வெளியேறப்போவதாக முடிவெடுத்துள்ள நிலையில் அந்த முடிவை ஜெனிவாவுக்கான அரச தூதுக்குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை ஜெனிவா அமர்வில் பகிரங்கமாக அறிவிக்கவைத்துள்ளார்.
அத்துடன், பொறுப்புக்கூறல் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடுகளையும் சர்வதேச சமூகத்தின் முன்னால் அவர் வெளிப்படுத்தவுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள இலங்கை குறித்த கண்காணிப்பு அறிக்கை தொடர்பான பதிலளிப்புக்களையும் செய்யவுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டும் தனது அறிக்கையின் சாரம்சத்தை அமர்வில் சமர்ப்பணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. மனித உரிமை சபையின் கூட்டத்தொடர் ஆரம்பம்! விவாதத்திற்கு வரும் இலங்கை விவகாரம் -
Reviewed by Author
on
February 24, 2020
Rating:
Reviewed by Author
on
February 24, 2020
Rating:


No comments:
Post a Comment