இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் -
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து தேடி அறிவதற்காக, ஐ.நா மனித உரிமை பேரவை துரிதமாக சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை தேசிய ரீதியாக இப்படியான பொறிமுறையை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 மற்றும் 40-1 யோசனையை அமுல்படுத்த போவதில்லை என இலங்கை தெரிவித்துள்ளதால், இந்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என கண்காணிப்பகம் யோசனை முன்வைத்துள்ளது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை பற்றியும் சிந்திக்க வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கண்காணிப்பது, வன்முறைக்கு உள்ளாக்குவது, அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகள் குறித்து செய்திகள் கிடைத்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளதை மேற்கோள்காட்டி அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் 15 மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மீனாட்சி கங்குலி இந்தவிடயங்களை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தமது கடமைகளை செய்ய அஞ்சும் நிலை அதிகரித்துள்ளது.
பல சிவில் நிறுவனங்களை ராஜபக்ச அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளது. பிரதான அரச நிறுவனங்கள் உயர் பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் போர் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளரதக நியமிக்கப்பட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர். ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் என்ன செய்ய போகின்றீர்கள் என அந்த புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இந்த நிலைமையில் எதிர்காலத்தில் ஜெனிவா நபருக்கு செல்ல மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு தடையேற்படும் ஆபத்து இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் -
Reviewed by Author
on
March 07, 2020
Rating:

No comments:
Post a Comment