கொரோனாவால் டயாலிசிஸ் சிகிச்சை எப்படி நடைபெறுகின்றது -மருத்துவக்குழு விளக்கம்!
‘சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும்.இந்த மாதிரியான சூழலிலும் டயாலிசிஸ் சேவை எப்படி நடைபெறுகின்றது என்பதை பற்றி மருத்துவக்குழு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
``சிறுநீரகக் கோளாறால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டியது கட்டாயம். இது உயிர் காக்கும் சேவை என்பதால் அரசு மருத்துமனைகளில் தொடர்ந்து நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் நோயாளிகள் டயாலிசிஸ் செய்துகொள்ள மருத்துவமனைக்கு தாமாகவே வந்துவிடுகிறார்கள். அப்படி வர இயலாத பட்சத்தில் தகவல் தெரிவித்தால் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
டயாலிசிஸ் எடுத்துக்கொள்ளாமல் விடுபட்ட நோயாளிகளின் தகவல்களைத் திரட்டி மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மருத்துவத்துறை செய்து வருகிறது. ஒரு சிலர் வீட்டிலிருந்தே பெரிடோனியல் டயாலிசிஸ் எடுத்துக் கொள்கிறார்கள்.

பெரிடோனியல் டயாலிசிஸ் என்பது சிறுநீரகக் கோளாறுக்காக வீட்டிலேயே ரத்தத்தை சுத்திகரிப்பு செய்துகொள்ளும் முறை.
இதில் பெரிடோனியம் எனப்படும் வயிற்றின் அடிப்பகுதியில் துளையிட்டு ஒரு குழாய் செலுத்தப்பட்டு அதில் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் டயாலிசேட் (dialysate) என்ற திரவம் செலுத்தப்படும். அந்தத் திரவம் ரத்தத்தில் உள்ள கழிவுகளை உறிஞ்சி வெளியேற்றும்.
இவர்களுக்கு சொல்யூஷன் ரீஃபில்லை மட்டும் வாரத்துக்கு ஒரு முறை மாற்றி வழங்குகிறோம்.
டயாலிசிஸ் செய்துகொள்ள வருபவர்களுக்கு முதலிலேயே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கிறோம். ஒருவேளை அப்படி காய்ச்சல் உறுதியானால் அதற்கேற்ற நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.
டயாலிசிஸ் செய்துகொள்ள வரும் நோயாளிகள் அனைவருக்குமே மாஸ்க் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. இதோடு டயாலிசிஸ் யூனிட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் மாஸ்க்குகள் வழங்கப்படுகின்றது.
பின்னர் சரியான முறையில் கைகளைக் கழுவிய பிறகே நோயாளிகளை டயாலிசிஸ் யூனிட்டில் அனுமதிக்கப்படுவார்கள்.புதிதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு பதினைந்து நாள்களுக்கான மருந்துகள் மட்டுமே கொடுப்பது வழக்கம்.
ஆனால், தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக ஒரு மாதத்துக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் முன்னதாகவே சேர்த்தே வழங்கப்படுகின்றன.
இப்போதைய சூழ்நிலையில் உலகளவில் யாரும் புதிதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சையை மேற்கொண்ட பின் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடும் என்பதால் அறுவை சிகிச்சையைத் தள்ளி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு டயாலிசிஸ் அவசியம் எனில் அவர்களுக்கென பிரத்யேக டயாலிசிஸ் யூனிட்டையும் மருத்துவமனை நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது என்று மருத்துவக்குழு அறிவித்துள்ளது.
கொரோனாவால் டயாலிசிஸ் சிகிச்சை எப்படி நடைபெறுகின்றது -மருத்துவக்குழு விளக்கம்!
Reviewed by Author
on
April 20, 2020
Rating:

No comments:
Post a Comment