கொலை செய்யப்பட்ட சுனில் ஜயவர்தனவின் கொலைக்கான பின்ணனி காரணம்.....
கொரோனா தொற்றினால் கடனை செலுத்துவதற்கு தாமதமான தமது நண்பருக்கு ஏற்பட்ட பிரச்சினையில் தலையிட்டபோது சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டார்.
53 வயதான அவர் நுகேகொடை அம்புல்தெனியவிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வைத்து தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு தாமதமானதால், சுனில் ஜயவர்தனவின் நண்பரின் முச்சக்கரவண்டி அந்த நிறுவனத்தினால் எடுத்துச்செல்லப்பட்டது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கமைய சலுகையை வழங்குமாறு சுனில் ஜயவர்தன தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த நிலையில், இறுதியில் அவர் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட சுனில் ஜயவர்தன இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
சுனில் ஜயவர்தன தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் சுனில் ஜயவர்தனவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி கஸ்பாவ பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை,சுனில் ஜயவர்தனவிடம் பல்வேறு போராட்டங்களில் இணைந்து செயற்பட்ட குழுவினர் கொழும்பில் இன்று ஊடகசந்திப்பு ஒன்றை நடத்தி சில விடயங்களை வௌிப்படுத்தினர்.
முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அங்கு சென்றபோது, அங்கிருந்த ஒருவர் அதிருப்தி வௌியிட்டதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.
இந்நிலையில், சுனில் ஜயவர்தனவின் தொலைபேசி எங்கே என சிவில் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
அவர் இறுதியாக 4.30 அளவில் என்னை தொலைபேசியில் அழைத்தார். மிரிஹான என்பது வன்னியா? அதியுயர் பாதுகாப்பு வலயம். ஏன் அங்குள்ள CCTV காணொளிகளை பார்க்காதுள்ளீர்கள்? நாம் அழைத்தபோது தொலைபேசி செயற்பட்டது. தொலைபேசியை பொலிஸார் எடுத்துச்சென்றிருப்பர் என நாம் நினைத்தோம். இன்று தொலைபேசி இல்லை. கொலையுடன் தொடர்புடைய 8 பேரின் தொலைபேசி அழைப்புக்களை பார்த்தீர்களா? அவர்கள் யாருடன் குடித்தார்கள். இதனை செய்யுமாறு அவர்களுக்கு கூறியது யார்?
என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கேள்வி எழுப்பினார்.
அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பின்வருமாறு தெரிவித்தார்
லீசிங் சலுகையை வழங்குமாறு அரசாங்கத்தினால், மத்திய வங்கியினால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் சலுகை வழங்கப்படவேண்டிய முறைமை குறித்து மிகத் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை எவ்வாறு செலுத்துவது, சலுகை எவ்வாறு கிடைக்கும் என இந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட்டியை எவ்வாறு அறிவிடுவது என்பது குறித்து இந்த ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எம்மை ஏமாற்றி அவர்களுக்கு வேறு சுற்றுநிரூபம் ஒன்று 2020 மே 4 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றுநிரூபத்திற்கு அமையவே தாம் வட்டியை அறிவிடுவதாக பினான்ஸ் நிறுவனம் கூறுகின்றது. நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

No comments:
Post a Comment