கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசு தேர்தல் இலாபம்.... சஜித் அணி வெளியிட்ட தகவல்.......
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான கொள்கையைக் கொண்டவர்களே சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.
தாங்களே ஐக்கிய தேசியக் கட்சி என்று கூறிக் கொள்ளும் தரப்பினரிடம் சிறிகொத்தவில் கட்டடம் மாத்திரமே இருக்கின்றது.
தற்போது ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே இணைந்துகொண்டுள்ளனர்.
தாங்கள் ஐ.தே.கவினர் என்று கூறிக் கொள்பவர்களுக்கு ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலிருந்தும் 10 ஆதரவாளர்கள்கூட கிடைக்க மாட்டார்கள். ஆனால், எம்முடன் பலகணக்கான ஆதரவாளர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த ஐ.தே.க. தரப்பினர் எமக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர் என்று பல்வேறு முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கின்றன.
இந்தக் குழுவினரால் எமது ஆதரவாளர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு கட்சியல்ல , மாபெரும் சக்தி. இந்நிலையில் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் உறுப்புரிமை மற்றும் பதவியைப் பாதுகாப்பதற்காக நாங்கள் ஒருபோதும் பின்வாங்காமல் முன்னிற்போம்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசு தேர்தல் இலாபம் கருதிச் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே முயற்சித்து வருகின்றது. இதனால் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு ஓர் அவப்பெயரை அரச தரப்பினர் ஏற்படுத்தியுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே கொரோனாத் தொற்று நீக்கம் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு செயற்படுகையில் இவர்களது செயற்பாடு நாட்டு மக்கள் அனைவருக்குமே சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஒரு எதிர்கட்சிக்குரிய பொறுப்புக்களை யார் நிறைவேற்றுகின்றார்கள் என்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடனே இருக்கின்றார்கள்” – என்றார்.
Reviewed by Author
on
June 02, 2020
Rating:


No comments:
Post a Comment