மலேசிய கடலில் மாயமான ரோஹிங்கியா அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்
மலேசியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற ரோஹிங்கியா அகதிகள் அந்நாட்டின் லங்காவி கடல் பகுதியில் மூழ்கியிருக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், 26 ரோஹிங்கியா அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மலேசியாவின் மூத்த கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை 25ம் தேதி லங்காவி கரையை ஒரு ரோஹிங்கியா அகதி நீந்தி அடைந்திருக்கிறார். இவருடன் வந்த மற்ற அகதிகள் கரையை அடையும் முயற்சியில் மூழ்கியிருக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில் சிறு தீவு ஒன்றின் அருகே அகதிகள் உயிருடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
“தீவிலிருந்த புதர்களில் மறைந்திருந்த நிலையில் அவர்கள் கண்டறியப்பட்டனர்,” என மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் இயக்குனர் ஜெனரல் ஜூபில் மட் சோம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மீட்கப்பட்ட அனைத்து அகதிகளும் மலேசிய அதிகாரிகளால் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகள் மலேசியாவை வந்தடைந்தது தொடர்பாக ஆட்கடத்தல் சந்தேகத்தில் இரு ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஜூபில் கூறியிருக்கிறார்.
வங்கதேசத்திலிருந்து பெரிய படகில் அழைத்து வரப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவை அடைவதற்காக சிறு படகிற்கு மாற்றப்பட்டுள்ளனர் என மலேசிய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கடந்த மாதம் ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைவது தொடர்பாக பேசியிருந்த மலேசிய பிரதமர் முகிதீன் யாசின், கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிற்கு இடையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார்...

No comments:
Post a Comment