காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் பரவக்கூடும் கொரோனா..........
கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று ஓர் உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உள்ளரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டிவரும்.
காற்று வழியாக தொற்று பரவும் வாய்ப்பை உலக சுகாதார நிறுவனம் குறைத்து எடைபோட்டுவிட்டதாக 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் ஒன்று அந்த அமைப்பை குற்றம்சாட்டியுள்ளது.
ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
''இந்த புதிய ஆதாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'' என உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டவரும், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியல் ஆராய்ச்சியாளருமான ஜோஸ் ஜிம்னேஷ் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
''இது நிச்சயம் உலக சுகாதார நிறுவனத்தை தாக்கி நாங்கள் அனுப்பிய கடிதம் அல்ல. இது ஓர் அறிவியல் விவாதம்; ஆனால் நாங்கள் பலமுறை இது குறித்து விளக்கியும் அவர்கள் இது குறித்து கேட்க மறுப்பதால், இதனை பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த புதிய ஆதாரங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இது குறித்து மேலும் விரிவான மதிப்பீடு தேவை என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Reviewed by Author
on
July 08, 2020
Rating:


No comments:
Post a Comment