மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கை பிரிவு பொறுப்பதிகாரி கைது
மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கை பிரிவு பொறுப்பதிகாரியான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரியளவான போதைப்பொருள் கடத்தற்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவுடன் இணைந்து போதைப்பொருளைக் கடத்தி விற்பனை செய்து ஆயுதங்களை சேகரித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விசாரணை தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் குழுவொன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 49 வயதான குறித்த சந்தேகநபர் புவக்பிட்டிய வெஹேரகொல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலம் பதிவு செய்ததை அடுத்து அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கட்டளைகளுக்கு அமைய சந்தேகநபரை தடுத்து வைத்து அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கமைய பத்திரிகை செய்தியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதமுலன – அம்பகொலவெவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஊடகவியலாளரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
COVID-19 தொற்று காலப்பகுதியில் ஊடகவியலாளர் என்ற ரீதியில் செயற்பட்டு பாதுகாப்பு பிரிவினரை தவறாக வழிநடத்தி ஹோமாகம பிட்டிபன பகுதிக்கு சட்டவிரோத துப்பாக்கிகளை கொண்டுசெல்ல உதவிய சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிகளை திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு மற்றும் பல்வேறு தரப்பினருக்கு வழங்குவதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்கு சொந்தமான வேனில் ஊடகவியலாளர்களுக்கான பதாதையைக் காட்சிப்படுத்தி, அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத துப்பாக்கிகளை பிட்டிபன பகுதிக்கு கொண்டு செல்ல உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மன்னார் நகர் நிருபர்

No comments:
Post a Comment