உலக தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.
நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.
கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.
நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.
கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.
நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார்.
நகராசுகரன் வீழ்கிறான்.
பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.
இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட. ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.
ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர்.
இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர்.
இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.
தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு.
வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.
அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.
தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொரோனா தொற்று சூழ்நிலையில் வழமை போன்று தீபாவளியை கொண்டாட முடியாத போதிலும் அனைவரும் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வீடுகளில் இருந்தவாறே இந்த திருநாளை கொண்டாட இம்முறை தயாராக இருக்கின்றனர்.
உலக தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Reviewed by Author
on
November 14, 2020
Rating:
Reviewed by Author
on
November 14, 2020
Rating:


No comments:
Post a Comment