யாழில் வலுவிழக்கும் பாரம்பரியம்!!
இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்நோக்கிப் பார்த்தால் அப்போது கூட இப் பனைமரங்களே யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற கிராமங்களுக்கு ஜீவனோபாய தொழிலிற்கான மூலாதாரமாக காணப்பட்டது.
இப்பனைவளம் யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளிலே அதிகம் காணப்படுகின்றது. பூலோக கற்பக விருட்சங்களாக கருதப்படும். பனைமரங்களின் அடிதொட்டு நுனி வரை ஏதோவோர் தொழில்வாண்மைக்கு உதவும் மூலமாக காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்து பனைமரத்துக்கும் விவசாயத்திற்கும் இடையே ஒரு தொப்புள்கொடி உறவுண்டு விவசாயத்திற்கு நிலத்தைப் பண்படுத்த காவோலைகள் என்று கூறுப்படும் பனையின் காய்ந்த ஓலைகள் உரமாக வெட்டித்தாட்பார்கள்.
உரமாக மட்டுமன்றி விவசாய உற்பத்தி வேலைகளை செய்வதற்கான சிறுசிறு வேலை உபகரணங்களாகவும் பனைசார் உற்பத்திகளை பயன்படுத்துகின்றனர். இப்பனைசார் உற்பத்திகளை மேற்கொள்வதற்கென்றே ஒவ்வோர் ஊரிலும் தேர்ச்சிபெற்ற உற்பத்தியாளர்கள் காணப்படுவார்கள். அவர்கள் அநேகமாக யாழின் கிராமப்புறம் சார்ந்து முழுநேரமும் பனைசார் உற்பத்தியில் கிடைக்கும் வருவாயையே நம்பியிருக்கும் ஜீவநோபாய தொழில்புரியும் நபர்களாக காணப்படுவார்கள்.
யாழ்ப்பாணத்தின் காரைநகர், அராலி போன்ற பிரதேசங்களிலே இப்பனைசார் உற்பத்திகள் அநேகம் நிகழ்கின்றன. பனையின் குருத்தை காயவைத்து கிடைக்கும் ஓலைச்சார்பில் இருந்து தயாரிக்கப்படும் கடகம், சுளகு, பெட்டி என்பவையே பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.
இவ்வாறான பனைசார் உற்பத்திகளையே நம்பி தனது ஜீவனோபாய வாழ்க்கையை நடாத்திச்செல்லும் ஒரு தனிமனிதரது வாழ்க்கை பல விடயங்களை எனக்குள் சிந்திக்க வைத்தது.
யாழ்ப்பாணத்தின் விவசாயத்தையும் பனைசார் உற்பத்திகளையும் நம்பி தமது வாழ்க்கையை நகர்த்தும் அராலி மத்தி வட்டுக்கோட்டை கிராமத்திலேயே வசிக்கும் க.சிவனடி ஐயாவுடன் நகர்ந்த சில நாள் பொழுதுகளைப் பற்றியதாக இப்பதிவு காணப்படுகின்றது. அத்துடன் இங்கே அக்கிராமத்து மக்கள் தமது ஜீவனோபாய தொழிலாக பனைசார் உற்பத்திகளை மேற்கொள்கின்றனர். அந்தவகையில் அவர்கள் எவ்வாறு அதனை சவால்களுக்கு மத்தியில் மேற்கொள்கின்றனர் என்பதனையும் பற்றி விளக்கமாக நோக்கலாம்.
விவசாயமே முதுகெலும்பாக இருந்த காலகட்டத்தில் யாழின் பனைசார் உற்பத்திகளை மேற்கொள்வோருக்கென்று ஒரு தனிமதிப்பு காணப்பட்டது.
அம்மதிப்பு முறையிலேயே அவர்களின் வாழ்க்கைமுறை எவ்வாறு காணப்பட்டது என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆனால் இன்றையநிலை என்ன என்ற கேள்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த விடை கிடையாதா? என்றால் விடைகள் தொக்கித்தான் கிடைக்கும். ஒரு தனிநபரின் வாழ்க்கை அச் சமூகத்தின் நிலைப்பாட்டை முழுதாக வெளிப்படுத்தாமல் போனாலும் இன்னமும் சிலர் அதேநிலைப்பாட்டில் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருப்பது என்பது நிதர்சனம்.
என்னுடைய பயணமோ பனைசார் உற்பத்திகளின் இன்றையநிலை சார்ந்து அறிந்து கொள்ளலாம் என்று எனது பயணம் தொடர்ந்தது. அந்த பயணத்தில் எம்மவர்களின் பாரம்பரிய தொழில்முறைமையே பல்லாயிரங்கணக்கான குமுறல்களுக்குள் சிக்கித்தவிக்க வழிவகுத்துள்ளது என்றால் நீங்கள் மனதிற்குள் சிரிப்பீர்கள்.
அக்களத்திற்கே சென்று அந்தக் குமுறல்களை நேரடியாகப் பார்த்து அவையெல்லாம் காதுகள் கொண்டு கேட்டால் கனக்ககூடிய கதைகள். அக்கிராமத்திலேயே பல வயது முதிர்ந்தவர்கள்தான் இன்னமும் பாரம்பரியத்தைக் காக்கவேண்டும் என்பதற்காக தம்முடைய வாழ்க்கைச் செலவிற்கு கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லையென்று தெரிந்தும் மூன்றுவேளை உணவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை இத்தொழிலைவிட்டு வேறெதுவும் செய்யோமென்று விடாப்பிடியாக இருக்கும் சில பாரம்பரிய விசுவாசிகளை சந்திக்க நேர்ந்தது.
வயது முதிர்ந்தவர்களே அதிகம் பனைசார் உற்பத்திகளான கடகம், பெட்டி, சுளகு, நீத்துப்பெட்டி, இடியப்பத்தட்டு என்பவற்றை ஆண்பெண் இருபாலருமே செய்துவருகின்றனர்.
இப்போது நம்நாட்டில் அதிகரித்த விலையேற்றத்திற்கு மத்தியில் கூட விடாப்பிடியாக பாரம்பரியமென்று இத்தொழிலை விட்டுச் செல்லாதோர் ஒருபுறமிருக்க இப்பனைசார் உற்பத்திகளை தவிர வேறெந்த தொழிலும் தெரியாது என்ற காரணத்தினாலும் இத்தொழிலை விரும்பியோ விரும்பாமலோ செய்யும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
பருவகாலத்திற்கு ஏற்றாற்போலவே உற்பத்திப்பொருட்களுக்கான மூலங்களை பெற்றுக்கொள்ள கூடியதாக காணப்படுகின்றது. அத்துடன் மாரிகாலத்திலேயே இவர்களின் உற்பத்திகள் முடங்கிப்போகின்றது. அத்துடன் இக்காலங்களிலே பலர் தமது உற்பத்திச் செலவிற்கு ஏற்றாற்போல குறித்த இலாபம் வைத்து விற்பனை செய்ய சரியான சந்தைப்படுத்தல் முகாமைத்துவங்கள் பற்றிய புரிதலின்மையால் மாடாக உழைத்தாலும் உற்பத்திச்செலவுடன் ஒரு சிறிய இலாபமே கிடைக்கின்றது.
இப்படி தொழில்சார் பிரச்சினைகள் பல காணப்பட்டாலும் அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியையும் மனநலம் குன்றிய மகளையும் இத்தொழிலின் வருவாயை நம்பியே 78 வயதிலும் சிவனடி ஜயா வாழ்ந்து வருகின்றார்.
மனிதன் ஒருவன் உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதிகளான நீர், உணவு, வாழிடம் என்பவற்றிற்கே திண்டாடும் நிலையில் தன்னுடைய வாழ்க்கையை, முழுதாய் கட்டி முடிக்கப்படாத மழைநீர் ஒழுகக்கூடிய வீட்டிற்குள் பாதுகாப்பற்று வாழ்ந்துகொண்டு, பனைசார் உற்பத்திகளை மேற்கொள்ளும் நபராக இவர் காணப்படுகின்றார்.
இந்த வகையில் பாரம்பரிய தொழிலை செய்யுமளவிற்கு சரியான முறையில் மூலப்பொருட்களைப் பெற்று அவற்றை முறைசார்ந்த முறையில் பங்கீடு செய்து தொழில்புரிவோர்க்கு இலாபமீட்டும் வகையில் ஓர் சந்தைப்படுத்தலை ஏற்படுத்திக் கொடுக்கும் போது இப் பாரம்பரிய தொழில் முறைமை சரியான வகையில் அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட்டு அனைத்து தொழில்புரிவோரும் இத்தொழில் மூலம் தமது வாழ்க்கையை நடாத்துவது கடினமின்றி காணப்படும்.
சரியான சந்தைப்படுத்தல்களை பிரதேச செயலகங்கள் மற்றும் கிராமசேவையாளர்கள் ஏற்படுத்தி கொடுக்கும் போது அங்கே இலகுவான முறையில் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியும். இதனால் ஒவ்வொருவருடைய வாழ்க்கைத்தர உயர்வும் சரியானமுறையில் அமையும். எம்முடைய யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய தொழில் முறைமையும் அழிந்துபோகாமல் அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படும்.
கிரிசா சுரேந்திரன்
Department Of Media Studies,
University of Jaffna.
யாழில் வலுவிழக்கும் பாரம்பரியம்!!
Reviewed by Author
on
December 10, 2021
Rating:
No comments:
Post a Comment