வட கடலில் 134 கி.கி. கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேச கடற்கரையை அண்டிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 134 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
நேற்று (09) இரவு குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட 134 கி.கி. (ஈர நிலையில் எடை) கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையின் உத்தர நிறுவனத்திற்கு உரித்தான கடற்கரை பாதுகாப்பு கண்காணிப்பு கப்பல் மூலம் யாழ்ப்பாணம், வெல்வெட்டித்துறை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த 4 மூடைகள் அவதானிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த 4 சாக்குகளில் 58 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 134 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் காரணமாக கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு ரூ. 44 மில்லியன் (ரூ. 4.4 கோடி) இற்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சா, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
Reviewed by NEWMANNAR
on
April 10, 2023
Rating:





No comments:
Post a Comment