தலைமன்னார் மண்ணில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் புனித வெள்ளி உடக்குபாஸ் நிகழ்வு.-Photos
தலைமன்னார் மண்ணில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் புனித வெள்ளி உடக்குபாஸ் நிகழ்வு.
மன்னார் மறை மாவட்டத்தின் பழைமையான பங்குகளில் ஒன்று தலைமன்னார் பங்கு ஆகும். இதில் தலைமன்னார் மேற்கில் அமைந்துள்ள புனித லோறன்சியார் தேவாலயமானது பல நூற்றாண்டுகளைக் கடந்த ஒரு ஆலயமாகும். இவ்வாலயமானது ஒல்லாந்தர் பழைய புனித லோறன்சியார் தேவாலயத்தை உடைத்து சேதப்படுத்திய பின்னர் புதிய இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு ஆலயமாகும். இங்கு அதிகமான கத்தோலிக்கர் வாழ்ந்து வருகின்றனர்.
தவசு காலத்தின் புனித வாரத்தில், புனித வெள்ளி என்பது கத்தோலிக்கருக்கு ஒரு முக்கியமான துக்க நாளாகும். இந் நாளில் இயேசுவின் பாடுகள,; மரணம் என்பவற்றைச் சிந்தித்து உண்ணா நோன்பிருந்து செபிப்பது கத்தோலிக்க மரபாகும். இம் மரபையும் கத்தோலிக்க விசுவாசத்தையும் பாதுகாக்க மக்களின் எண்ணங்கள். உணர்வுகள். நடத்தையில் மாற்றமடைய வேண்டியதொன்றெனக் கருதிய கத்தோலிக்க குருக்கள் மற்றும் இறைமக்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக செயற்படுத்தி வரும் ஒரு பக்தி முயற்சி உடக்குபாஸ் நிகழ்வாகும்.
மன்னார் மறைமாவட்டத்தின் உடக்குபாஸ் நிகழ்வின் தாய் நிலம் தலைமன்னார் மண் ஆகும். இங்கு எமது முன்னோர் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்திலிருந்து உடக்குப்பாஸ் நிகழ்வை ஒரு பக்தி முயற்சியாக நிகழ்த்தி வந்தனர். தற்போது உள்ள சேமக்காலையின் உள்ளே இருந்த ஆலயமே எமது மக்களின் பழைமையான ஆலயமாகும். இவ்வாலயம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இங்கு உடக்குப்பாஸ் நிகழ்வுகள் தலைமன்னாரில் இடம்பெற்று வந்ததாக வரலாற்று ஆதாரங்கள் மற்றும் வாய்மொழி பாரம்பரியம் குறிப்பிடுகின்றது.
இப் பாரம்பரியம் கலாச்சாரத்தில், கிறிஸ்தவ விசுவாசத்தில் திலைத்திருந்த மக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை அதனைக் கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பாக இவ் வருடம் (07.04.2023) புனித வெள்ளி அன்று இயேசுவின் பாடுகள் மரணத்தை சிந்திக்க உடக்குபாஸ் நிகழ்வுக்கான ஆயத்தங்கள் தலைமன்னார் மண்ணில் ஏற்படுத்தப்பட்டது. இதில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பெரியவர்கள் உண்ணா நோன்பிருந்து பக்தியுடன் இவ் நிகழ்வை ஆயத்தம் செய்தனர். புனித வெள்ளி திருப்பலி நிறைவடைந்ததும் சரியாக 10.00 மணிக்கு இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி இடம்பெற்றது. இதில் இயேசுவின் பாடுகளை விபரிக்கும் பிரசங்கம், பாடல்கள் என்பன இடம்பெற்று பின்னர் ஆசந்தி நிகழ்வு இடம்பெற்றது. இவ் ஆசந்தி நகழ்வில் அனைவரும் மெழுவுவர்த்தி ஏந்தி பக்தியுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். இந் நிகழ்வை தலைமன்னார் பங்கின் பங்குத் தந்தை அருட்.பணி.மாக்கஸ் அடிகளார் நேர்த்தியாக இழுங்குபடுத்தியிருந்தார். 1000 க்கும் மேற்பட்ட மக்களுடன் இவ் புனித வெள்ளி நிகழ்வானது 08.04.2023 அன்று காலை 12.45 மணிக்கு நிறைவடைந்தது.

No comments:
Post a Comment