மலையகம் 200 : மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம்!
தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான மாண்புமிகு மலையகம் எனும் தொணியிலான நடைபயணம் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது.
பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தமிழகத்தில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
இதனை நினைவுக்கூறும் வகையில், இன்று பிற்பகல் 4 மணிக்கு மன்னாரில் ஆரம்பிக்கும் 252 கிலோமீற்றர் வரையான நடைபயணம் எதிர்வரும் ஒகஸ்ட் 12 ஆம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது.
மாண்புமிகு மலையகம் எனும் தொணியில் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்தே இந்த நடைபயணத்தை ஏற்பாடு செய்துள்ளன.
மலையக மக்களை ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல், வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம், வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்காக, பாதுகாப்பான உரிமைக் காலத்துடனான காணி உரிமை, உள்ளிட்ட 11 கோரிக்கைகள் இந்த நடை பயணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நடைபயணத்தில் நேரில் கலந்துகொள்ள இயலாதோர், தங்கள் பிரதேசங்களிலேயே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஓவியங்கள், எழுத்துகள், பாடல்கள், காணொளிகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் மூலம் ஆக்கப்பூர்வமாக ஆதரவளிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Author
on
July 28, 2023
Rating:


No comments:
Post a Comment