உ/த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களுக்கு 29 நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்தவும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்வதற்குமான அனுமதி எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட வினாப்பத்திரங்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குவதாக அல்லது அதற்கு சமமான வினாக்களை வழங்குவதாக போஸ்டர்கள், பேனர்கள், கையேடுகள் ஆகியவற்றை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி செயற்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது தமது திணைக்களத்திற்கு அறியத்தருமாறு பரீட்சைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 04 ஆம் திகதி முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

No comments:
Post a Comment