வவுனியாவில் இந்தியா அரசினால் வழங்கப்பட்ட அரிசி பதுக்கல் - ஒரு வருடங்களாகியும் முற்றுப்பெறாத விசாரணை
வவுனியாவில் இந்தியா அரசினால் வழங்கப்பட்ட அரிசி பதுக்கல் - ஒரு வருடங்களாகியும் முற்றுப்பெறாத விசாரணை
வவுனியாவில் இந்தியா அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் 1276 கிலோகிராம் பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணையானது இது வரை முடிவுறாத நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 29ம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விபரத்தினை வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட போது, குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலகத்தால் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாகவும், இவ் விசாரணை தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என பிரதேச செயலகம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்ட செயலகத்தால் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றால் குறித்த விடயத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என வவுனியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட 1276 கிலோகிராம் நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, குறித்த அரிசியினை மேலதிக பரிசோதனைகளுக்காக பிரதேச செயகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by வன்னி
on
January 01, 2024
Rating:







No comments:
Post a Comment