வெடுக்குநாறி ஆலய கைது விவகாரம்: மக்கள் எழுச்சி மூலமே நீதியை நிலைநாட்ட முடியும்! வேலன் சுவாமி
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வழிபாட்டின் போது கைது செய்யப்பட்டர்கள் தொடர்பில் மக்கள் எழுச்சி மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
வவுனியா நீதிமன்றத்தில் இன்று (12.03) இடம்பெற்ற வெடுக்குநாறி ஆலய வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆலயத்தில் பொலிசாரால் அடாவடியாக, அராஜகமாக கைது செய்யப்பட்ட பூசகர் உட்பட 8 பேரினதும் வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 19 ஆம் திகதிக்கு வழக்கு திகயிடப்பட்டுள்ளது. எந்தவித ஒரு நியாயமும் இல்லாமல், எந்தவித ஒரு நியாயமான காரணங்களும் இல்லாமல் தொல்பொருட் திணைக்களத்தின் அறிக்கை மிகவும் பொய்யான விதத்தில் வழங்கப்பட்டு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களை விட அங்கிருக்க கூடிய தொல்பொருட் திணைக்களத்தினர் தான் பலவித மீறல்களை, அத்துமீறல்களை செய்கின்றனர். சிறிலங்கா பொலிசாரின் அடாவடி தொடர்ந்து கொண்டிருகிகிறது. கைவிலங்குடன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் எமது உறவுகள் 8 பேரும் ஒழுங்கான உணவின்றி, மிகவும் வேதனையாக இருகிகிறார்கள். அவர்களது உறவினர்கள் மிகவும் வேதனையுடன் இருகிறார்கள்.
இந்த சூழ் நிலையில், ஈழத்தமிழினமாக மக்கள் எழுச்சிப் போராட்டத்தை வடக்கு - கிழக்கு தழுவி வவுனியாவில் போராட்டத்தை நடத்த வேண்டும். மக்கள் எழுச்சி தான் இலக்குகளை அடையவும், நீதியை நிலை நாட்டவும் செய்யும். சிவராத்திரி தினத்தன்று கூட ஒவ்வொரு போராட்டமாக தான் அந்த நிகழ்வை செய்ய முடிந்தது. போராட்டம் மூலமே இலக்கை அடைய முடியும். பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தமிழ் தேசியப்பற்றார்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும் என வேண்டி நிற்கின்றேன் எனத் தெரிவித்தார்.
Reviewed by Author
on
March 12, 2024
Rating:


No comments:
Post a Comment