கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு- குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இல்லை-மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக தஞ்சம்.
மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் சென்று இன்று சனிக்கிழமை (30) காலை தனுஷ்கோடி மணல் திட்டிற்கு சென்று இறங்கியவர்களை மீட்ட இந்திய கடற்படையினர் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் பொருளாதார நெருக்கடி மற்றும் போதை பொருட்களின் பயன்பாடு அதிகமானதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் தமிழகம் வந்ததாக தெரிவித்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மன்னர் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் அவரது மனைவி ரீட்டா மேரி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கினார்.
மணல் திட்டில் நின்று கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் நால்வரை மண்டபம் இந்திய கடலோர காவல்படை ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் மெரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட நால்வரையும் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் இலங்கை தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தினசரி ஒரு குடும்பத்தில் ஒரு நேரம் மட்டும் சாப்பிட முடிவதாகவும், இலங்கையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பாக வாழ முடியாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
March 30, 2024
Rating:





No comments:
Post a Comment