மே 18 இனப்படுகொலை வாரம் தொடர்பில் புதிய திட்டம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, மே 18 இனப்படுகொலை வாரத்தை இவ்வாண்டில் இருந்து புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும் எனவும், யாழில் சிவில் அமைப்புக்கள் கூடி ஆராய்ந்துள்ளன.
யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் இடம்பெற்ற சிவில் சமூக அமைப்புகளின் ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவையும் இன்று காசாவில் நிகழ்ந்து கொண்டிருப்பவையும் இனிமேலும் எந்த மக்களுக்கும் நிகழக் கூடாது எனவும் சிவில் சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும், முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலை மீள நிகழாமை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக மக்கள் அனைவரும் சிந்திக்கும் தளமாக உருவமைப்பு செய்வதற்கு, மக்கள் சார்ந்து சிந்தித்து செயற்படும் பல சிவில் சமூக அமைப்புகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு விரோதமாக மூளைச்சலவை செய்யப்படுவதிலிருந்தும், மக்களுக்கு எதிராக செயற்படும் அரசு, பெருவணிக நிறுவனங்கள், கட்சிகள், அமைப்புகளின் பிரசாரங்களிலிருந்தும், தம்மை விடுவித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலை பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாகவும் மக்கள் மயப்படுத்தி மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் கலந்துரையாடப்பட்டு, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நினைவேந்தல் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.
மேலும், மக்கள் தமக்கு எவ்வாறான வாழ்க்கை தேவை, அதற்கு எவ்வாறான சமூக பொருளாதார அரசியல் ஏற்பாடுகள் தேவை என்பதைத் தாமே சிந்தித்து, அதற்காக குரல் கொடுத்து செயற்படும் காலம் வந்து விட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
April 22, 2024
Rating:


No comments:
Post a Comment