இலங்கைக்கு வந்துவிட்டது அதி வேக இணைய சேவை ;ஸ்டார்லிங்க்
இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ‘ஸ்டார் லிங்க்‘ நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று முதல் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகளைப் பெற்று, தொழில்நுட்பத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.
இதுவரை கோபுரங்கள் ஊடாக வழங்கப்பட்ட குறைந்த அளவிலான இணைய வசதிகளுக்குப் பதிலாக, இந்த செய்மதி தொழில்நுட்ப இணைய வசதி மூலம் எங்கிருந்தும் இணைய வசதியைப் பெற முடியும்.
இதன் ஊடாக தொழில்நுட்பத் துறையில் மாற்றம் ஏற்படப் போகிறது. மாணவர்கள், ஆய்வாளர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு இந்த இணையதள சேவை பெரும் வசதியாக அமையும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணைய வசதியையும் பெற முடியும்.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ், செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு இணைய வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், மீனவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இணைய சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நிவாரணப் பொதியை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 2000 “Starlink” வலையமைப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment