யாழ். பல்கலையில் போதைப் பாவனை இல்லை ; போதை ஒழிப்பு RTI இல் வெளிவந்த உண்மை
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்ட முறைப்பாடுகள் எவையும் கடந்த ஓராண்டு காலமாக கிடைக்கப் பெறவில்லை” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்க் கோரப்பட்ட பின்வரும் விடயங்களிற்கு பதிலளிக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் போதைப் பொருள் பாவனையோ அதுசார்ந்த முறைப்பாடுகளோ கிடைக்கப் பெறவில்லை என்று பதிலளித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்டதாக முறைப்பாடுகள் எவையேனும் பல்கலைக்கழக மாணவர்கள், கலைப்பீட மாணவர்களிற்கு எதிராக கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள் பதிவாகியுள்ளதா?
அவ்வாறு பதிவாகியிருப்பின் பதிவாகிய சம்பவங்கள் எத்தனை?
பதிவாகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை?
பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளிற்கு தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
போதைப் பொருட்கள் எவையேனும் கைப்பற்றப்பட்டிருப்பின், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது யாருடைய பாதுகாப்பில் ஃ கையிருப்பில் உள்ளன?
போதைப் பொருள் பாவனையோடு தொடர்புடைய மாணவர்கள் மீள கற்றல் நடவடிக்கைளிற்கு திரும்புவதற்கு ஏதேனும் ஆற்றுப்படுத்தல் அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் பாவனை உள்ளதென்று பல்கலைக்கழக மாணவர்களின் மீது பாராதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்து கலைப்பீடப் பீடாதிபதி சி.ரகுராம் கடந்த 25, சனவரி 2025 அன்று பதவி விலகி, ஒரு வாரகாலத்தினுள் மீள பொறுப்பேற்றிருந்தார்.
மாணவர்களிற்கு எதிராக தான் மேற்கொண்ட நிர்வாக முறைகேடுகளை மூடிமறைப்பதற்காகவே அவர் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களிற்கும் எதிராக இவ்வாறான பொய்யானதொரு அவதூறினை பரப்பியிருந்தார் என்பது தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக 25, சனவரி அன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவரது முறைகேடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அவரது நிர்வாக முறைகேடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றிய சட்டத்துறை மாணவனினால் சவாலிற்கு உட்டபடுத்தப்பட்டது.
பேராசிரியர் ரகுராமின் வலியுறுத்தலின் பேரில் அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.
எனினும் குறித்த வகுப்புத்தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மாணவனிடம் சரணடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், 26.03.2025 அன்று எவ்வித நிபந்தனைகளுமின்றி வகுப்புத்தடை, விசாரணைச் செயன்முறைகள் யாவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் அளித்துள்ள பதிலின் அடிப்படையில் அவரது குற்றச்சாட்டு பொய்யானதொன்று என்பது நிரூபிக்கப்பட்டள்ளது.
மேலும் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்று கோரிய பேராசிரியர் ரகுராமினால் கூட எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
June 21, 2025
Rating:


No comments:
Post a Comment