அண்மைய செய்திகள்

recent
-

விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா?

சமகாலத்தில் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வு பலஸ்தீன விவகாரமாகும். மனிதநேயம் கொண்டவர்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு காஸாவின் அழுகுரலாகும்.


பலஸ்தீன விவகாரம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. கள்ளத்தனமாக இஸ்ரேல் என்ற நாடு தோற்றுவிக்கப்பட்ட பின்னணியிலிருந்து ஆரம்பமானது.


அன்று அரபு நாடுகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கும், அக்கிரமத்திற்கும் எதிராகப்போரிட்டு பல இழப்புகளைச் சந்தித்ததை மறந்து விட முடியாது. 


கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் காரணமாக இன்றைய சூழலை எவ்வாறு கையாள்வது? என்பதில் அரபுலகு கண்ணுங்கருத்துமாகச் செயற்படுவதைக் காணலாம்.


இச்சூழ்நிலையில் பலஸ்தீன விவகாரத்தில் சவூதி அரேபியாவை பலர் விமர்சனம் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 


இஸ்லாமிய வரலாற்றுடன் பின்னிணைப்பிணைந்துள்ளதால் சவூதி அரேபியா முஸ்லிம்களின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகத்திகழ்கின்றது. இரு புனிதஸ்தலங்கள் அமைந்திருப்பதோடு, இஸ்லாம் வளர்ந்த பிரதேசம், தங்களது உயிரிலும் மேலாக நேசிக்கும் நபி(ஸல்) அவர்கள் பிறந்து, வாழ்ந்த பிரதேசம் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்களால் நேசிக்கப்படும் தேசமாக சவூதி அரேபியா உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.


உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் சவூதி அரேபியா என்ற நாடு உலக முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணைகாட்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு சவூதி அரேபியா மீது கொண்டுள்ள நம்பிக்கை முஸ்லிம் விரோத சக்திகளுக்கு அடிக்கடி எரிச்சலைக் கொடுத்து வருகின்றது. 


அதேநேரம், சவூதி தன்னாலான அனைத்து உதவிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளுக்கும் தொடராக வழங்கி வருவதைக் காணலாம். 


முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் பல அபிவிருத்தித்திட்டங்களுக்கு பெருமளவு நிதிகளை வழங்கி வருவதும், அங்கு வாழும் முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணையோடு செயற்படுவதும், பிரச்சினைகள் வரும் போது இராஜதந்திர ரீதியாக அழுத்தங்களைக்கொடுத்து தீர்வ்களைப் பெற்றுக்கொடுப்பதையும் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து காணலாம்.


சில நாடுகளில் கொடுமைகளை அனுபவித்த முஸ்லிம்களுக்கு தன்னுடைய நாட்டுக்குள் தஞ்சம் கொடுத்து சவூதி வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது.


சவூதி அரேபியாவில் காணப்படும் எண்ணெய் வளம் உலகில் முக்கியத்துவம் பெற்றதாகும். சவூதியோடு உறவைப்பலப்படுத்திக்கொள்ளவே உலக நாடுகள் விரும்புகின்றன. முஸ்லிம் நாடுகளில் பலமான நாடாக சவூதி விளங்குவதாலும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பிலும் முஸ்லிம்களின் விவகாரங்களில் தலையீடு செய்வதிலும் அதிக பங்கு சவூதி அரேபியாவிற்கே இருக்கின்றது.


சவூதியைப்பலவீனப்படுத்த வேண்டுமென்பதில் சவூதியின் வளர்ச்சியைப்பிடிக்காத முஸ்லிம் விரோதச்சக்திகள் சவூதிக்கெதிரான விமர்சனங்களை பூதகரமாக்கி மக்கள் மயப்படுத்துவதில் அன்று தொட்டு இன்று வரை முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.  


சவூதியை அழிப்பதற்கு முதல் உலக முஸ்லிம்களின் உள்ளத்திலும் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்களுக்கெதிரான மனோநிலையினை ஏற்படுத்தி வெறுப்பை உருவாக்கி ஏனைய நாட்டிற்குள் அரபு வசந்தம் என்ற போர்வையில் உள்நுழைந்து அந்த நாடுகளை நாசம் செய்தது போல் சவூதியையும் நாசம் செய்து புனிதஸ்தலங்களையும் துவம்சம் செய்ய வேண்டுமென்ற எண்ணமாகும்.


பல முறை பல முயற்சிகள் நடந்தும் இறைவன் அருளால் அவை முறியடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.


தற்போது நீண்ட நாட்களாக பலஸ்தீனத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலும் காஸாவின் அழுகுரல்களும் முஸ்லிம் உம்மத்தை மாத்திரமின்றி, மனிதநேயமிக்க மக்களையும் நாடுகளையும் உலுக்கியிருக்கிறது. 


இந்த விவகாரத்தில் கொதித்துப்போயிருக்கும் மக்களின் உணர்வுகளைத்தூண்டி விட்டு சவூதி அரேபியாவுக்கெதிராக திருப்பி விட வேண்டுமென்ற குறிக்கோளில் இஸ்லாத்தின் எதிரிகள் மிகக்கச்சிதமாக ஊடகங்களைப்பயன்படுத்தி உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதோடு, பலஸ்தீன விவகாரத்தில் அன்று தொடக்கம் இன்று வரை சவூதி மேற்கொண்டு வரும் அத்தனை முயற்சிகளையும் மூடிமறைத்துச் செயற்படுவதைப் பார்க்கலாம்.


முஸ்லிம்களோடு நட்புறவாடி நயவஞ்சகத்தால் வீழ்த்த நினைக்கும் சில நாடுகள் தங்களை முஸ்லிம்களின் காவலனாக காட்டுவதற்கும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 


ஆனால், உண்மையில் பலஸ்தீன விவகாரம் உட்பட பல முஸ்லிம் நாடுகளுக்கும், முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் தனது செல்வத்திலிருந்து அதிகளவான கொடை கொடுப்பதும், அவர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வதிலும், அவர்களுக்கான பிரச்சினைகளின் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் இராஜதந்திர ரீதியில் தலையீடுகளைச் செய்வதிலும் முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து சர்வதேச ரீதியாக அழுத்தங்களை உருவாக்கி சாதிப்பதிலும் சவூதிக்கு முதன்மை இடமிருக்கிறது. எனவே தான் சவூதியின் பலத்தை குறைப்பதற்கும் பல சக்திகள் திரைமறைவில் காய் நகர்த்துகின்றன.


சவூதி அரேபியா நாடு என்ற அடிப்படையில் தனது குடிமக்களின் எதிர்காலம் தொடர்பாக அதிக கரிசனை காட்டுவதோடு, உலகில் பரந்து வாழும் முஸ்லிம்கள் தொடர்பிலும் கரிசனை காட்டுகிறது. உலக விவகாரங்களில் வேறு நாட்டு விடயங்களில் தலையீடு செய்யும் போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயற்பட முடியாதென்பது நிதர்சனமான உண்மை.


எந்த நாடும் வேறு நாடுகள் தங்கள் விடயத்தில் தலையீடு செய்வதை விரும்பாது. சர்வதேச ரீதியாகவும் தடைகள் இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த விவகாரங்களில் தனது நட்பு நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று சர்வதேச அமைப்புகளின் கவனத்தை குறித்த விடயங்களில் திருப்பி இராஜதந்திர ரீதியான நகர்வுகளினூடாகத்தான் சாதிக்க முடியும். 


பலஸ்தீன விவகாரத்திலும் சவூதியின் செயற்பாடுகளும் பலமான நகர்வுகளாகவே இருக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் மனோநிலைக்கு வந்திருப்பதன் பின்னணியில் சவூதியின் வேலைத்திட்டம் இருக்கிறது. பலஸ்தீன மீளெழுச்சியில் நிதி ரீதியாக பெரும் பங்களிப்பையும் தொடராக வழங்கி வருகிறது. 


இவ்வாறான மனிதாபிமான உதவிகளை உறவுகளுக்காக வழங்கி வரும் சவூதியின் பணிகளைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் என்ற ரீதியில் மோசமாக விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.


உணர்வுகளுக்கு அடிமைப்பட்ட சமூகமாக நாம் இருந்து விட்டு, விமர்சித்து விட்டுப்போக முடியாது. இவ்வாறான பிழையான விமர்சனங்கள் மற்றவர்களின் மனங்களில் தப்பான எண்ணங்களைத்தோற்றுவிப்பதோடு, எதிரிகள் தங்களின் இலக்கை எம்மூடாக நிறைவேற்றிக் கொள்ளவும் இடங்கொடுக்கக்கூடாது. 


ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் ஒவ்வொருவரின் பொறுப்புகள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்பதை நாம் நம்பியிருக்கிறோம், 


இஸ்லாம் இவ்வாறான விவகாரங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென வழிகாட்டியிருக்கத்தக்கதாக சில உலமாக்களும் ஏனையவர்களும் தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் ஆரோக்கியமல்ல. அரபுமொழியை அறியாதவர்கள் என்ன நடக்கிறது எனப்புரியாதவர்கள் ஊடகங்களின் தவறான கதைகளை நம்பி விமர்சனம் செய்வது ஆரோக்கியமல்ல என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.


இன்னும் சில உலமாக்கள்,அறிஞர்கள் பலஸ்தீன விவகாரம் உட்பட சவூதியின் செயற்பாடுகளையும் அதன் நியாயங்களையும் உண்மைத்தன்மையை மக்கள்  விளங்கிக்கொள்ள வேண்டும்,


தவறான புரிதல் ஆபத்தானது என்பதையும் யார் உண்மையான முஸ்லிம்களின் நண்பர்? யார் இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும், அறியாமையின் காரணத்தினால் நன்மை செய்வோருக்கெதிராக மற்றவர்கள் பாவம் செய்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் இவ்விடயங்களைப்பதிவு செய்து கொள்கிறார்கள்.


நமக்குத்தெரியாத விடயத்தில் போலியான தகவல்களை நம்பி உண்மைக்குப்புறம்பாகப்பேசுவதை விடுத்து நம்மிடமிருக்கும் பலமான ஆயுதமான துஆவை பலஸ்தீன மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்.


சவூதியின் ஆட்சியாளர்கள் இன்னும் இவ்விடயங்களில் கரிசனை காட்டுவதற்கு நல்லெண்ணங்களோடு பிரார்த்தனை செய்வோம். அதுவே மிக ஆரோக்கியமான செயலாக இருக்கும்.


சவூதி அரேபியா தன்னாலான தனியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் அதே வேளை, சவூதி அரேபியாவை தலைமையாக, தளமாகக் கொண்டியங்கும் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான “இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)” காசா-இஸ்ரேல் மோதல் தொடர்பான விடயங்களை தீவிரமாகக் கையாண்டுவருகிறது.


இஸ்ரேலைக் கடுமையாக கண்டித்து வருவதுடன்,  காஸாவில் இடம்பெறும் இஸ்ரேலிய நடவடிக்கைகளை "போர்க்குற்றங்கள்" என்றும் சர்வதேச சட்ட மீறல்கள் என்றும் முத்திரை குத்தி வருகின்றது.


அத்தோடு, கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராகக்கொண்ட சுதந்திர பலஸ்தீன் மலர வேண்டும். இடம்பெயர்வை நிராகரித்தல் மற்றும் இஸ்ரேலுக்கெதிரான தென்னாப்பிரிக்காவின் ICJ இனப்படுகொலை வழக்கை ஆதரித்தும் வருகின்றது. 


அத்துடன், மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மனிதாபிமான உதவி வழங்குமாறு ஏனைய நாடுகளையும் வலியுறுத்துதல், காஸாவின் முற்றுகையை நீக்குதல் மற்றும் பாலஸ்தீன அதிகார சபை நிர்வாகத்தின் கீழான காசாவிற்கு $53 பில்லியன் மதிப்புள்ள அரபு மறுகட்டமைப்புத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளல்.


அத்துடன், இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து அவசரக்கூட்டங்களை நடத்துதல் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற தன்மையை விமர்சித்தல் என கூட்டாகவும் தனியாகவும் சவூதி அரேபியா பல்வேறு பணிகளை பல சவால்களை எதிர்கொண்டு மேற்கொண்டு வருவதை மறுதலிக்க முடியாது. 





அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் (UAE), கத்தார் போன்ற ஏனைய நாடுகளும் தம்மாலான பல்வேறு இராஜதந்திர, மனிதாபிமான முயற்சிகளை, உதவிகளை முன்னெடுத்தே வருகின்றன. 


இது அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்கி துதிபாடுவதாக அல்லாமல் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கான பதிவாகும்.


எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.





விமர்சிக்கப்பட வேண்டியது சவூதியா? Reviewed by Admin on July 31, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.