பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவதானித்த அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு சேசமடைந்த கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றியுள்ளனர். கடற்படையினரும் முழு வீச்சுடன் செயற்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடல் பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Vijithan
on
July 13, 2025
Rating:


No comments:
Post a Comment