செம்மணி குறித்து நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தமிழ் ஆர்வலரின் வீட்டுக்கு அருகில் மர்ம வாகனம்?
இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியை உலகிற்கு வெளிப்படுத்துவதில் முன்னின்ற இந்து மயானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரை அச்சுறுத்தும் முயற்சி வடக்கில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தனது வீட்டை நெருங்கி இராணுவ முகாமுக்குள் நுழைவதைக் கண்டதாக, சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகக் குழுவின் வைத்தியலிங்கம் கிருபாகரன் ஜூலை 8ஆம் திகதி பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செம்மணியில் புதைகுழி வளாகத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகமாக இது பதிவாகியுள்ளது.
சித்துப்பாத்தி இந்து மயானக் குழுவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் கிருபாகரன், பெப்ரவரி 18 அன்று யாழ்ப்பாணக் பொலிஸ் நிலையத்தில், பெப்ரவரி 11, 2025 அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்திருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் அமைந்துள்ள இந்து மயானங்களில் மனித உடல்கள் பொதுவாக அடக்கம் செய்யப்படுவதில்லை என்பதால், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டமை அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
யாழ்ப்பாண பொலிஸார் இந்த விடயத்தை நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின.
பல குற்றங்கள் நடைபெற்ற இடமாக விளங்கும் புதைகுழி குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்க முன்வந்ததால், மர்ம வாகனம் தனது வீட்டிற்கு அருகில் வந்துள்ளதாக வைத்தியலிங்கம் கிருபாகரன் சந்தேகிக்கின்றார்.
“மர்ம வாகனம் ஒன்று தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தது. அவ்வாறே நான் வசிக்கின்ற பகுதிகளுக்கும் குறித்த மர்ம வாகனம் வந்திருந்தது. என்னுடைய பார்வையில் குறித்த மர்ம வாகனம் தொடர்பாக செய்திகள் வந்தமைக்கு மிகப்பிரதான காரணம், வழக்குத் தொடுனரான என்னை அச்சுறுத்துவதாகும்”
செப்டம்பர் 7, 1996 அன்று செம்மணியைச் சேர்ந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் கூண்டில் இருந்துவாறு செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு பேர் வரையில் புதைக்கப்பட்ட மனித புதைகுழிகள் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
அந்த நேரத்தில் அந்தப் பகுதி இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்டதால், பொது மக்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லை என கிருபாகரன் வலியுறுத்துகின்றார்.
புதைகுழி தொடர்பான ஆரம்ப தகவல்களை பொலிஸாருக்கு வழங்கும் விடயத்தில் தான் முன்னின்று செயற்பட்ட காரணத்தினால், அரியாலைப் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சாட்சியமளிக்க முன்வருவதைத் தடுக்கும் முயற்சியாக சந்தேகத்திற்கிடமான வாகனம் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வைத்தியலிங்கம் கிருபாகரன் எழுப்பியுள்ளார்.
"நான் இந்த விடயத்தை கையில் எடுத்த காரணத்தினால் அரியாலை பகுதியில் இருக்கின்ற அதிகளவான பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய சாட்சியங்களை தந்துகொண்டிருக்கின்ற நிலைமையில் அந்த சாட்சியங்களை பயமுறுத்துகின்ற அந்த சாட்சியங்களை முன்வரவிடாமல் தடுக்கின்ற செயற்பாடாக அந்த செயற்பாடு இருந்தது.”
இலங்கை இராணுவத்தின் ஏனைய நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச குறிப்பிட்ட, குறித்த இராணுவ முகாம் இன்னமும் அவ்விடத்தில் இருப்பதாக வைத்தியலிங்கம் கிருபாகரன் மேலும் கூறினார்.
"இந்த பொன்னம்பலம் சந்தியில் இருந்து அதாவது 98ஆம் ஆண்டு சோமரத்ன ராஜபக்ச தன்னுடைய புதைகுழிகள் தொடர்பான அறிக்கையிலே 15ஆவது புதைகுழியாக குறிப்பிடப்பட்ட ஏ9 வீதியில் பொன்னம்பலம் சந்திக்கு அருகில் இருக்கின்ற இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற அந்த கிணற்றில் அகழ்வு இடம்பெற்றிருந்தது. அதற்கு பின்னால் இப்போதும் இராணுவ முகாம் இருக்கின்றது. அந்த தனியார் காணியில் இருக்கின்ற இராணுவ முகாமுக்குத்தான் குறித்த வாகனம் சென்றது. நான் அவதானித்திருக்கின்றேன்."
1999 ஆம் ஆண்டு செம்மணிப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமல் போன இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 பேர் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த சில நாட்களாக செம்மணிப் பகுதியில் இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்திய சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகக் குழுவின் வைத்தியலிங்கம் கிருபாகரன் , இது சாட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையாக இருக்கலாம் என மேலும் சந்தேகம் வெளியிட்டார்.
“நான் வசிக்கின்ற காணி என்பது, ஒழுங்கையே என்னுடைய காணியில்தான் முடிகிறது. அவ்வாறு ஒரு வாகனம் அங்கு வரவேண்டிய அவசியம் இல்லை. குறித்த வாகனமும், மற்றுமொரு வாகனமும் வந்திருந்தது அதுத் தொடர்பில் அதனை கண்ணால் கண்ட பிரதேசத்தில் இருக்கும் பொது மகன் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments:
Post a Comment