என்னை கொலைசெய்யும் முன் காப்பாற்றுங்கள் – சவூதியில் இருந்து இலங்கைப் பெண் அவசர கோரிக்கை
சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தன்னை விரைந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஒரு வருடமாக என்னை அடித்து, அவமானப்படுத்தி, கடுமையான வேலை கொடுத்து துன்புறுத்தி வருகின்றனர். வீட்டு உரிமையாளர்கள் சாப்பிட்டு குப்பையில் போடும் மீதியை நான் பல மாதங்களாக சாப்பிட்டு வருகிறேன்.
அவர்கள் என்னை ஒரு இருட்டு அறையில் அடைத்து, சித்திரவதை செய்கிறார்கள்… எனக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. என்னைக் கொல்வதற்கு முன்பு என்னை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுங்கள்…” என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜி.பி. தம்மிகா பத்மா குமாரி என்பவரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்மிகா 51 வயதான ஒரு குழந்தையின் தாய். தனது ஒரே மகளைப் படிக்க வைக்கவும், நிரந்தர வீடு ஒன்றைக் கட்டுவதற்காக சிறிது பணத்தைச் சேமிக்கவும், பணிப் பெண்ணாக ஜூலை 3, 2024 அன்று சவூதி அரேபியாவுக்குச் சென்றார்.
சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்ற தனது தாயாரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தம்மிடம் ஏழரை லட்சம் ரூபாய் நிதி கோருவதாகவும், கூலி வேலை செய்யும் தனது தந்தையாலோ இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்க முடியாது என்றும் தம்மிகா பத்மகுமாரியின் மகள் குமுதுனி தாருகா கமகே தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது தந்தை ஜூலை ஏழாம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்ததாகவும், பின்னர் அந்த நிறுவனம் மூலம் அவளை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியதாகவும் தாருகா கமகே கூறினார்.
குமுதுனி அழுது கொண்டே, தனது தாயாரை வீட்டு உரிமையாளர்கள் தாக்கி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு முன்பு, இலங்கைக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சரிடமும் ஜனாதிபதியிடமும் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.
“என்னை ஒரு நிறுவனம் வேறொரு வீட்டிற்கு அனுப்பியது. இப்போது அந்தக் குடும்பத்தினர் என்னை ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறது. எனக்கு சாப்பிடவோ குடிக்கவோ அனுமதி இல்லை.
அந்தக் குடும்பத்தினர் சாப்பிடு குப்பையில் போடும் எஞ்சிய உணவை நான் பல மாதங்களாக சாப்பிட்டுகின்றேன். என் மகளுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்கும், நிரந்தர வீடு கட்டவும் வீட்டு வேலை செய்ய வந்தேன்.
ஆனால் இந்த வீட்டில் உள்ளவர்கள் என்னைக் கொல்வதற்கு முன்பு என்னை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். நான் இப்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன்.” என சவுதி அரேபியாவில் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டுள்ள ஜி.பி. தம்மிகா பத்மா குமாரி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment