இந்தியா இலங்கைக்கு உதவி கரம் நீட்டியதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிராக பேச கூடாது - செல்வம் அடைக்கலநாதன்
தென்னிலங்கையை சீனாவுக்கு கொடுங்கள். வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள். நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்வோம். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு உதவி கரம் நீட்டியதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிராக பேச கூடாது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;
தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலாத்துறையை விஸ்தரிக்க முடியும் வெளிநாட்டு பறவைகள் மன்னாரில் தான் தங்குகின்றன எனவே மன்னாரில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க முடியும் . அதனை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். அவர் கடற்படையில் ரொட்டி சுட்டவர் போலுள்ளது. எங்களைப் பொறுத்த வரையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியா இலங்கைக்கு உதவி கரம் நீட்டியது. இந்தியா கொடுத்த பணத்தில் சரத் வீரசேகர உடம்பை வளர்த்து விட்டு இப்போது இந்தியாவுக்கு எதிராகப் பேசுகின்றார்.
எங்களைப் பொறுத்த வரையில் நாம் சொல்கின்றோம் தென்னிலங்கையை நீங்கள் சீனாவுக்கு கொடுங்கள். வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிடம் விடுங்கள்.நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்வோம். இந்தியாவை பகைத்துக் கொண்டு இலங்கையால் ஒரு போதுமே செயற்பட முடியாது. இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா உள்ளது என்றார்.

No comments:
Post a Comment