தரையிறங்கும் போது ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக, தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A320 விமானம் பிரதான ஓடுபாதை 27 இல் இருந்து விலகி செப்பனிடப்படாத பகுதிக்குள் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் விமானத்திற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்ட போதிலும் விமான நிறுத்துமிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது.
ஓடுபாதையில் இறங்கும்போது விமானத்தின் மூன்று சில்லுகளும் (டயர்கள்) வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, இரண்டாம் நிலை ஓடுபாதை செயல்படுத்தப்பட்டுள்ளது,” என்று மும்பை விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தரையிறங்கிய பின்னர் ஏர் இந்திய விமானம் ஓடுபாதையில் இருந்து 16 முதல் 17 மீட்டர் தூரம் விலகிச் சென்றது, ஆனால் பாதுகாப்பாகத் திரும்பி விமான நிறுத்துமிடத்திற்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை 9.27 மணிக்கு கொச்சியிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் AI-2744 தரையிறங்கியபோது இந்த சம்பவத்தை எதிர்கொண்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) குழு விமான நிலையத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment