மன்னார் நகர சபையினால் கடந்த காலங்களில் பண்டிகைக் காலத்திற்கு என ஒதுக்கப்பட்ட வியாபார நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி அம்பலம்
மன்னார் நகர சபையினால் கடந்த காலங்களில் பண்டிகை காலத்தையொட்டி வியாபார நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த விடையம் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
-மன்னார் நகர சபையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் நகர சபையினால் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை பண்டிகை காலத்திற்கு என ஒதுக்கப்பட்ட வியாபார நிலையங்களில் ஊழல் இடம் பெற்றுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை(3) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.
குறித்த விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு, மக்களின் பணம் திருடப்பட்டு இருந்தால் குறித்த பணம் மீள நகர சபைக்கு கொண்டு வர வேண்டிய கடமைப்பாடு இருக்கிறது.
இவ்வாறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊழல் வாதிகளை, உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
மேலும் 2022 ஆம் ஆண்டு பண்டிகைக்கால வியாபரத்திற்கு என ஒதுக்கப்பட்ட கடைகளில் 31 கடைகள் ஏலம் இன்றி வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பான உள்ளக விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊழல் மோசடி இன்னும் விசாரணையில் உள்ளமையினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த விசாரணையை தமது பொறுப்பில் எடுத்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான ஊழல் வாதிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.மேலும் மன்னார் நகரில் 5 ஜீ (FIVE G) டவர் அமைக்கும் விடயத்திலும் சூட்சுமமான முறையில் முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளது.
குறித்த டவரில் மின் குமிழ்கள் அமைத்து தருவதாக கூறி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.எனினும் குறித்த டவரில் 5 ஜீ தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த விடயம் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு,அதற்கான தீர்வையும் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
குறித்த விடயங்கள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து ஊழல் வாதிகளுக்கு தகுந்த தண்டனை யை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பண்டிகைக்கால வியாபார நிலையங்களுக்கு இடம் ஒதுக்குவது தொடர்பில் கடந்த காலத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டு,குறித்த குழுவின் ஊடாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
குறித்த குழுவில் மன்னார் நகர சபையின் கணக்காய்வாளர்,செயலாளர்,கடந்த நகர சபை தலைவர்,இரண்டு உறுப்பினர்கள் ஆகியோர் குறித்த குழுவில் செயல்பட்டனர்.
விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர்கள் இவர்களாகத்தான் இருக்க வேண்டும்.அவர்களுக்கு தெரியாமல் கடைகள் ஏலம் இன்றி வழங்கி இருக்க முடியாது.
இவர்களை விசாரணைக்கு உட்படுத்தும் போது இவர்களில் யார் ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வரும். என அவர் மேலும் தெரிவித்தார்

No comments:
Post a Comment