வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர்.
இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். அடாவடியான இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர்.
இதனால் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இளைஞர்களின் செயற்பாட்டினால் தடுமாறிய பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என விடாப்பிடியாக நின்றனர் . இதனால் குறித்த பகுதியில் கலவரம் ஒன்று ஏற்ப்படுவதற்கான நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதனையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட பொதுமக்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இராமசாமி அந்தோணிப்பிள்ளை வயது 58 என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலத்திற்கு அருகில் பொலிஸார் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சனை ஒன்றும் காணப்படுகின்றது
குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர், கலகதடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Reviewed by Vijithan
on
July 12, 2025
Rating:

No comments:
Post a Comment